திருப்பதி: நிறைவுற்றது பிரம்மோற்சவ விழா!


திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று காலையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு புனித நீராடினர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, செப்டம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால், மாட வீதிகளில் வாகன சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்தது. அதன்படி, செப்டம்பர் 27-ம் தேதி முதல் நேற்று 5-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், முதல் நாள் உற்சவத்தன்று மாலை ஆந்திர அரசு சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முதல் நாள் இரவு பெரிய சேஷ வாகன சேவை நடைபெற்றது. பின்னர் தினந்தோறும் காலை, இரவு என இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான அக்டோபர் மாதம் 1-ம் தேதி இரவு கருட சேவை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை காண திருமலையில் குவிந்தனர். இதனைத் தொடர்ந்து தங்கத் தேரோட்டம், பழமையான தேர்த்திருவிழா என பிரம்மோற்சவம் களை கட்டியது. இந்த பிரம்மோற்சவத்தில் தமிழகம், புதுவை உட்பட 8 மாநிலங்களைச் சேர்ந்த 1906 நடன கலைஞர்கள், 91 குழுக்களாக வந்து மாட வீதிகளில் நடனக் கலை புரிந்து பக்தர்களைக் கவர்ந்தனர்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை, சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையொட்டி, வராக சுவாமி கோயில் அருகே உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. அதன் பின்னர் புஷ்கரணியில் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் அரங்கேறின. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தில் மூழ்கி புனித நீராடினர்.

பின்னர், மாலையில் உற்சவர்கள் மாட வீதிகளில் தங்கத் திருச்சியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனைத் தொடர்ந்து தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்ட பிரம்மோற்சவ கொடி இறக்கப்பட்டு, பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

x