திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், 8-ம் நாளான இன்று காலை தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
கோயிலின் எதிரே உள்ள வாகன மண்டபத்தின் அருகே இருந்து தேர் பவனி தொடங்கியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளிலும் கம்பீரமாக தேர் உலா வந்தது. மலையப்பர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேர் திருவிழாவை காண மாட வீதிகளில் நூற்றுக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர். அப்போது அவர்களில் பலர் தேரின் மீது மிளகு, உப்பு போன்றவற்றை தெளித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் வரை நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில், திருப்பதி தேவஸ்தான ஜீயர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை மலையப்பர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அத்துடன் எட்டாம் நாள் உற்சவம் நிறைவுக்கு வருகிறது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நாளை சக்கர ஸ்நான வைபவம் நடைபெறுகிறது.