இறந்து 6 மாதங்களான இளநிலை பொறியாளரை இடமாற்றம் செய்த நகர்ப்புற வளர்ச்சித்துறை!


கலபுர்கி: இறந்து 6 மாதங்களான பொறியாளரை இடமாற்றம் செய்து கர்நாடகா நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம், சேடம் நகராட்சியின் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் இளநிலைப் பொறியாளராக பணியாற்றியவர் அசோகா புடபக். இவர் கடந்த ஜனவரி 12-ம் தேதி உயிரிழந்தார்.

இந்த நிலையில், சேடம் நகராட்சியில் இருந்து குடகு மாவட்டம், மடிகேரி நகராட்சியின் இளநிலை பொறியாளர் பணிக்கு அசோகா புடபக்கை இடமாறுதல் செய்து ஜூலை 9ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான உத்தரவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் கர்நாடகா அரசிற்கு பலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இளநிலை பொறியாளர் அசோகா புடபக் இறந்து 6 மாதங்களான நிலையிலும் இது குறித்து எந்த தகவலும் மாநில அரசுக்கு தெரியவில்லையா? அப்படியானால் இந்த ஆறு மாத சம்பளமும் அவர் கணக்கில் வரவு வைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விக்கு அரசு சார்பில் பதில் அளிக்கப்படவில்லை. கர்நாடகா மருத்துவக் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஷரன்பிரகாஷ் பாட்டீலாவின் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த இந்த தவறு தற்போது துறைக்கும், அமைச்சருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

x