அரசு அதிகாரிகளை குறிவைத்து பணவசூலில் ஈடுபட்டு வந்த போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 22-ம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் ராஜன்பாபு(48). இவரது அலுவலகத்திற்கு வந்த நபர், தன்னை லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் எனக்கூறி உங்கள் மீது புகார் வந்துள்ளது அதை விசாரிக்க வேண்டும் என தெரிவித்ததுள்ளார். அத்துடன் அவரது அரசு வாகனத்திலே, அவரது வீட்டிற்கு சென்று சோதனையிட்டார். அப்போது பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்ட அந்த நபர், ராஜன்பாபு வாகனத்திலே கோயம்பேடு சிஎம்டிஏ அலுவலுகத்தின் அருகே இறங்கிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து ராஜன்பாபு அளித்த புகாரில் சிஎம்பிடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அடுத்த நாள் அதே நபர் தரமணி சிஎஸ்ஐஆர் சாலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வரும் அசோகன்(56) என்பவரிடம் சென்று லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் என்று கூறியுள்ளார். அத்துடன், தங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் 10-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. எனவே, 10லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்த்து விடலாம் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன அசோகன் அவசரமாக அவரை தனது காரில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு பணம் எடுக்க சென்றார். அங்கு பணமில்லாததால் வங்கி லாக்கரில் இருந்து பணத்தை எடுத்துக்கொடுப்பதாக கூறி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வங்கிக்கு அவரை அழைத்துச் சென்றார்.
அந்த சமயத்தில் அசோகனின் மனைவி வந்த அதிகாரி குறித்து விசாரித்த போது அவர் போலி லஞ்ச ஒழிப்பு அதிகாரி என தெரியவந்தது. உடனே வங்கி மேலாளாரை தொடர்பு கொண்டு தனது கணவரை லாக்கரில் இருந்து பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.. உடனே வங்கி மேலாளர் அசோகனுக்கு பணம் எடுக்க அனுமதி மறுத்ததுடன் தங்கள் மனைவி கேட்டு கொண்டதன் பேரில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.. அசோகனின் மனைவி கூறியதைக் கேட்டு சந்தேகமடைந்த அந்த நபர். நாளை பணத்தை பெற்று கொள்வதாக கூறிவிட்டு நுங்கம்பாக்கத்தில் காரில் இறங்கி தப்பி சென்றார்..
இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் அசோகன் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அடுத்தது இரண்டு நாட்களில் அரசு அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த மோசடி சம்பவம் தொடர்பாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சென்னை மாநகர போலீஸில் வாய்மொழி புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் நடைப்பெற்ற அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது இரண்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதும் ஒரே நபர் ஈடுபட்டது தெரிய வந்தது. சிசிடிவியில் பதிவான நபரின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி உஷார் படுத்தினர்.. பின்னர் தரமணி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பரங்கிமலை கேம்ப் ரோடு பகுதியில் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், நபர் மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சின்னையன்(52) என்பது தெரிய வந்தது.
பணம் வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்த அவருக்கு, கரோனா காலத்தில் அத்தொழில் மூலம் 20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தனது நடை, உடை, பாவனைகளை மாற்றி அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்த சின்னையன் வண்டலூரில் நடைபெறும் சிஎம்டிஏ பணி குறித்து அறித்து செயற்பொறியாளர் ராஜன் பாபுவிடம் 60 ஆயிரம் கைவரிசை காட்டியுள்ளார். இதற்கு அடுத்து நீர்வளத்துறை அதிகாரி அசோகனிடம் கைவரிசை காட்ட முயன்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.