காவலருக்கு மறுக்கப்பட்ட விடுப்பு; நின்று போன மகளின் நிச்சயதார்த்தம்: வருத்தம் தெரிவித்து டிஜிபி கடிதம்!


விடுப்பு அளிக்காததால், சொந்த மகளின் நிச்சயதார்த்தம் நின்று போனதாக எஸ்எஸ்ஐ ஒருவர் பேசிய ஆடியோ வைரலான நிலையில், அதற்கு டிஜிபி சைலேந்திர பாபு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அண்மையில் தேசியப் பாதுகாப்பு முகமையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவங்களை தொடர்ந்து தமிழகத்தில் பாஜக தொடர்புடைய பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த பதற்றமான சூழலில் அனைத்து காவலர்களும் விடுமுறையின்றி பணியாற்ற வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், தனக்கு விடுமுறை அளிக்காததால் ஞாயிறு அன்று நடைபெற இருந்த தனது மகளின் திருமண நிச்சயதார்த்தம் நின்று போனதாகச் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜ் வேதனையுடன் பேசிய ஆடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

சைலேந்திரபாபுவின் கடிதத்தில், “அன்புள்ள சந்தானராஜ், தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைப்பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இதுபோன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

x