சினேகன் என்னை மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கினார்: நடிகை ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி


பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த மாதம் 19-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நடிகை ஜெயலட்சுமி கூறினார்.

சினேகம் பவுண்டேஷன் விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இருவரது புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அவர்களை விசாரணைக்கு அழைத்து பின்னர் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ஆனால், சினேகம் பவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபட்டதாக பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்துது பொய் என்றும், அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய நடிகை ஜெயலட்சுமி இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அவதூறு பரப்பும் வகையில் பேசிய பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குபதிவு செய்து அடுத்த மாதம் 19-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அண்ணா நகர் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் ஆய்வாளர், திருமங்கலம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எழும்பூர் 8-வது நீதிமன்ற மேஜிஸ்திட்ரேட் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு நகலை நடிகை ஜெயலட்சுமி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்து விட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " சினேகம் அறக்கட்டளை மூலமாக பணமோசடியில் ஈடுபட்டதாக தன் மீது பாடலாசிரியர் சினேகன் பொய்யான புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து மூன்று முறை அழைத்து விசாரணை செய்து பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என போலீஸார் தெரிவித்தனர்.

சினேகன் எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் அளித்த பொய் புகார், என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் நீதிவேண்டி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். தற்போது பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தர்மம் வென்றுள்ளது. மேலும் இந்த உத்தரவு சமூக வலைதளம் மற்றும் பொது வெளியில் அவதூறாக பேசி வரும் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும்" என்றார்.

x