வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய பருவமழையான தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரை கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட தென்மேற்கு மலை மாவட்டங்களில் மட்டுமே மழையை கொடுக்கும். பிற மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவமழையால் மட்டுமே மழை கிடைக்கும்.
அக்டோபர் 20-ம் தேதிக்கு பின்னரே வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் வானிலை மாற்றம் காரணமாக கடந்த மாதம் தொடங்கி தமிழகம் முழுவதுமே தற்போது வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் தேவையான அளவிற்கு சில இடங்களில் தேவைக்கு அதிகமாகவே மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.