சாலையில் தேங்கிய மழைநீர்: சேற்றை இறைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து!


தானே: மகாராஷ்டிராவில் சாலையில் தேங்கிய மழைநீரில் ஆட்டோ ஒன்று சென்றபோது சேறு தெறித்ததால், ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் நன்னு கான் (எ) ஷாபாஸ், கோட்பந்தர் சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு ஆட்டோ, சாலைப் பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் இறங்கி சென்றது.

இதில், சேற்று தண்ணீர், இருசக்கர வாகனத்தில் சென்ற நன்னு கான் மீது தெறித்தது. இதனால் ஆட்டோ ஓட்டுநருக்கும், நன்னு கானுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து சென்றார்.

இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் அந்த வழியே திரும்பிவந்தபோது, நன்னு கான் அவரை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், நன்னு கான் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் தானே நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x