கர்நாடகா முதல்வரிடம் அளித்த மனுக்கள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு


முதல்வர் சித்தராமையாவிடம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் குப்பைமேட்டில் கிடந்ததால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாமராஜநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகா முதலமைச்சருமான சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் விவசாயிகள் சங்கங்கள், ஆக்சிஸன் விபத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலர் மனுக்களை வழங்கினர். தங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றி தருமாறும் நேரடியாக அவர்கள் முதலமைச்சரிடம் வலியுறுத்தினர்.

இப்படி முதலமைச்சர் சித்தராமையாவிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மைதானத்தின் அருகே குப்பை மேட்டில் தற்போது கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனு கொடுத்த விவசாயிகள், பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

இது ஆவணத்தின் உச்சம் என்று விவசாயிகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் சித்தராமையா உடனடியாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் முதல்வர் மாவட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டுவோம் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர். குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்றால் எதற்கு அவர் மனுக்களைப் பெற்றார்? முதல்வரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கே இந்த கதி என்றால், அதிகாரிகளிடம் அளிக்கும் மனுக்களுக்கு என்ன கதியோ என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கர்நாடகா முதல்வரிடம் வழங்கப்பட்ட மனுக்கள் குப்பையில் கிடந்த சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x