தங்கையின் சடலத்தை 5 கிமீ தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள்: ஆம்புலன்ஸ் கிடைக்காததால் அவலம்!


லக்னோ: உத்திரபிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உயிரிழந்த தங்கையின் சடலத்தை சகோதரர்கள் 5 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஷர்தா, காக்ரா, மோகனா உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலியா, லக்கிம்கூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள கிராமங்கள் மழை நீரால் சூழப்பட்டு இருப்பதால், நகரத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ரயில், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்துகளும் முற்றிலுமாக முடங்கி உள்ளது.

இதனிடையே சில நாட்களாக இப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும் டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல்கள் ஏற்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் நீண்ட தூரம் உடல் நலக்குறைவுடன் பயணித்து மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் பாலியா பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிவானி என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பாலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உரிய நேரத்தில் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காததால், அங்கு சிகிச்சை பலனின்றி சிவானி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான மஹராஜ் நகர் கிராமத்திற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு சகோதரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தொடர் மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி, வாகன வசதி செய்து தர மருத்துவமனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சிவானியின் உடலை சொந்த ஊருக்கு சுமந்து செல்ல சகோதரர்கள் மனோஜ் மற்றும் சரோஜ் ஆகியோர் முடிவு செய்தனர்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தங்களது கிராமத்திற்கு இருவரும் சிவானியின் உடலை மாற்றி மாற்றி தோளில் சுமந்தபடி ரயில் பாதையின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளனர். இதனை அவ்வழியாக சென்ற செய்தியாளர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது மனோஜிடம் அது குறித்து கேள்வி எழுப்பிய போது, சரியான நேரத்தில் சிகிச்சைக்காக அழைத்து சென்றிருந்தால் தங்களது சகோதரியை காப்பாற்றி இருக்க முடியும் எனவும், உயிரிழந்த பின்னரும் தங்கள் சகோதரியின் உடலை கிராமத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வித உதவியும் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

x