தமிழக அரசின் இல்லம் தேடிக்கல்வி திட்டத்திற்கு கலிபோர்னியா பேராசிரியர் குழு பாராட்டு


பேராசிரியர் கார்த்திக் முரளிதரன்

கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ததில் தமிழக அரசின் இல்லம் தேடிக்கல்வித் திட்டத்திற்கு முக்கிய பங்கு உள்ளது என கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் கார்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரோ ஆகிய மூவர் குழு கரோனா தொற்றின் போது தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் அதனை சீர் செய்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

சுமார் 18 மாதங்கள் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு, அதனைச் சரிசெய்ய பல்வேறு உலகளாவிய நாடுகள், மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட பலன்கள் குறித்து ஆய்வு செய்ததில், இல்லம் தேடிக்கல்வித் திட்டம் தமிழகத்தில் மிக முக்கிய பங்காற்றி இருப்பதை இக்குழு கண்டறிந்தது.

கரோனா ஊரடங்கால், தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு ஓராண்டும் மற்ற மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரையும் இந்த கற்றல் குறைபாடு ஏற்பட்டது. ஊரடங்கு முடிந்தபின் பள்ளிகள் திறந்த போது மற்ற மாநிலங்களில் கற்றல் குறைபாடு கொஞ்சம் முன்னேறிய நிலையில் அதைவிட ஒரு மடங்கு கூடுதலாக தமிழகத்தில் கற்றல் குறைபாடு சரிசெய்யப்பட்டதற்குக் காரணம் இல்லம் தேடிக்கல்வித் திட்டம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் கார்த்திக் முரளிதரன் கூறுகையில், " 2019-ம் ஆண்டு, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடக்கக் கல்வியில் கிராமப்புற மாணவர்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு தகவல்கள் திரட்டினோம். அதன் தொடர்ச்சியாக கரோனா ஊரடங்கின் போது, கற்றல் குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்ய, கரோனாவிற்கு முன்பாக எடுத்த தகவல்கள் பெரிதும் உதவின. சுமார் 7 கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் ஒரு சரியான திட்டமிடல் மூலம், கற்றல் குறைபாட்டை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது, வேறு எந்த நாடுகளும் செயல்படுத்தாத ஒன்று. பல்வேறு வளர்ந்த நாடுகளில் ஆன்லைன் வகுப்புகள் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது. இந்த நிலையில், வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறோம்.

கற்றல் குறைபாடு சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் சுமார் 25 சதவீதத்திற்கு மேல் இல்லம் தேடிக்கல்வித் திட்டம் பங்கை அளித்துள்ளது. மற்ற மாநிலங்களில் கற்றல் குறைபாடு 30- 40 சதவீதம் சரி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் மூன்றில் இரண்டு பங்கு சுமார் 65 சதவீதத்திற்கும் மேல் கற்றல் குறைபாடு சரி செய்வதற்கு மிக முக்கிய காரணம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தான் காரணம். ஐ.நா.வின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஆராய்ச்சி கட்டுரையைச் சமர்ப்பிக்கவும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

x