ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலை முயற்சி வழக்கு!


ஆந்திர பிரதேசம்: முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. ஆட்சியில் இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியால் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களிடையே அடிக்கடி மோதல் வெடித்து வருகிறது. ஒய்எஸ்ஆர் கட்சி அலுவலகம் இடிப்பு, முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் சிலைகள் எரிப்பு, ஒய்எஸ்ஆர் கட்சி கொடிக்கம்பங்கள் உடைப்பு என பல வன்முறைகள் அரங்கேறின. இந்த சூழலில் தற்போது ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது அம்மாநில போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவான ரகுராம கிருஷ்ண ராஜு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஜெகன்மோகன் மட்டுமில்லாமல், மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர். ஆஞ்சநேயுலு உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரகுராம கிருஷ்ண ராஜு அளித்திருக்கும் புகாரில், “மே 14, 2021 அன்று நான் சிஐடி அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டேன். ஆனால், அந்த அதிகாரிகளிடம் கைது வாரன்ட் இல்லை. கைதுசெய்யப்பட்ட பிறகு உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்பும் என்னை ஆஜர்படுத்தவில்லை. சட்டவிரோதமாக காவல்துறை வாகனத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டேன். அதே இரவு வலுக்கட்டாயமாக குண்டூருக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.

காவல்துறை அதிகாரிகள் என்னை பெல்ட்டால், தடிகளால் தாக்கினார்கள். எனக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிந்தும், இதய நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள கூட அனுமதிக்கவில்லை. சில அதிகாரிகள் மார்பில் அமர்ந்து என்னைக் கொல்லும் முயற்சியில் அழுத்தம் கொடுத்தார்கள்.

ஜெகன் மோகன் ரெட்டி, பி.வி.சுனில் குமார், பி.எஸ்.ஆர்.ஆஞ்சநேயுலு ஆகிய இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள், பிற காவல்துறை அதிகாரிகள் எனக்கு எதிராக சதி செய்தனர்." எனப் புகார் அளித்திருக்கிறார். இந்த வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று ஆந்திர காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


x