புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதி 'சம்விதான் ஹத்யா திவாஸ்' (அரசியல் சாசன படுகொலை தினம்) அனுசரிக்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவசர நிலையை அறிவித்தார். இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகளில் செய்திகள் தணிக்கை செய்து வெளியிடப்பட்டன.
இந்நிலையில் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி ஆண்டுதோறும் 'சம்விதான் ஹத்யா திவாஸ்' (அரசியல் சாசன படுகொலை தினம்) அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் வெட்கக்கேடான வெளிப்பாடாக, தேசத்தின் மீது அவசர நிலையை அறிவித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது.
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதியை 'சம்விதான் ஹத்யா திவாஸ்' (அரசியல் சாசன படுகொலை தினம்) ஆகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975ம் ஆண்டு அவசர நிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்.” என குறிப்பிட்டுள்ளார்.