'தொகுதி மக்கள் என்னை சந்திக்க ஆதார் எண் அவசியம்’: கங்கனா ரனாவத் அறிவிப்பு!


முதல் முறை எம்பி-யாகி உள்ள பாஜகவை சேர்ந்தவரும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத், தனது மக்களவைத் தொகுதியான, இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள மக்கள், தன்னைச் சந்திக்க விரும்பினால் ஆதார் அட்டையைக் கொண்டு வருவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம், மண்டி தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்பி-யாகி உள்ளார். இந்நிலையில் தன்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதார் எண்ணை கொண்டு வருவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

மண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது: இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். எனவே, மண்டி பகுதியைச் சேர்ந்தவர்கள், மக்களவை உறுப்பினரை சந்திக்க ஆதார் அட்டை அவசியம். மக்கள் சிரமத்துக்கு ஆளாகாமல் இருக்க, தொகுதி தொடர்பான அவர்கள் நாடி வரும் பணிகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இமாச்சலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு வரலாம். மண்டியில் உள்ளவர்கள் இங்குள்ள எனது அலுவலகத்துக்கு வரலாம்.

மக்கள் தங்கள் பணிகள் தொடர்பாக நேரில் சந்திப்பது நல்லது.” இவ்வாறு கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தொகுதி மக்கள் தன்னை சந்திக்க வருவதற்கு ஆதார் எண் அவசியம் என கங்கனா ரனாவத் அறிவித்துள்ளதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மண்டி தொகுதியில் கங்கனாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, அம்மாநில முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் கூறுகையில், “தொகுதி மக்கள் என்னை சந்திக்க விரும்பினால் ஆதார் அட்டை கொண்டுவர தேவையில்லை.

நாம் மக்கள் பிரதிநிதிகள். எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது நம் பொறுப்பு. சிறிய பணியாக இருந்தாலும், பெரிய பணியாக இருந்தாலும், கொள்கை விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட வேலையாக இருந்தாலும் அதற்கு எந்த அடையாளமும் தேவையில்லை. ஒரு மக்கள் பிரதிநிதியிடம் ஒருவர் வருகிறார் என்றால், அவர்கள் ஏதோ வேலைக்காக வருகிறார்கள். அவர்களிடம் தங்கள் ஆவணங்களை கொண்டு வரச் செல்வது சரியல்ல" என்றார்.

x