ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் கசிவு: ஓய்வுபெற்ற பேராசிரியர் கைது!


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் (ஆர்இஇடி)-2021 வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், ஓய்வுபெற்ற பேராசிரியரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 2021 செப்டம்பர் 26 அன்று நடைபெறவிருந்த ஆர்இஇடி- 2021 தேர்வை நடத்துவதற்காக ராஜஸ்தான் இடைநிலைக் கல்வி வாரியம் (ஆர்பிஎஸ்இ) உள்ளூர் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஓய்வுபெற்ற உதவிப் பேராசிரியரான டாக்டர் பிரதீப் பராஷரை நியமித்தது.

இவர், ராம் கிருபால் மீனா என்பவரை தனது உதவியாளராக எந்தவொரு அதிகாரப்பூர்வ உத்தரவுமின்றி நியமித்தார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று வரும் அனுமதி ராம் கிருபால் மீனாவுக்கு வழங்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் பேராசிரியர் பிரதீப் பராசரருடன் இணைந்து ராம் கிருபால் மீனா, திட்டமிட்டு வினாத்தாளை திருடி, மற்ற குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வழங்கி பெரும் பணத்தைப் பெற்றார். இந்நிலையில் ராம் கிருபால் மீனாவை அமலாக்கத்துறை ஏற்கெனவே கைது செய்து, அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் தற்போது பேராசிரியர் பிரதீப் பராசரை கைது செய்துள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிரதீப் பராசரை 3 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்இஇடி தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடுகள் தொடர்பாக ராஜஸ்தான் காவல் துறை முதலில் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தது.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தை கையிலெடுத்தது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, வழக்குத் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் பெருமளவில் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

x