மகாராஷ்டிரா: சர்ச்சையில் சிக்கிய பெண் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்!


புனே: மகாராஷ்டிரா அரசின் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பூஜா கேத்கர், அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் புனேவில் இருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றி வந்தார் டாக்டர் பூஜா கேத்கர். இவர் பயிற்சி காலத்திலேயே சிறப்பு சலுகைகள் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார். அரசு கார், தங்குமிடம், பணியாளர்கள், காவலர் மற்றும் அதிகாரபூர்வ அறை வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து புனே கூடுதல் மாவட்ட ஆட்சியர் அஜய் மோர் இல்லாத நேரத்தில் அவரது அறையை ஆக்கிரமித்து பூஜா கேத்கர் பெயர் பலகையை வைத்தார். அத்துடன் கூடுதல் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியின்றி சோபா, நாற்காலி, மேஜை உள்ளிட்ட அனைத்தையும் அகற்றியதாக கூறப்படுகிறது. அரசு அதிகாரியான பூஜா கேத்கரின் தந்தை, தன் மகளின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக பூஜா கேத்கர் மீது புனே மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுஹாஸ் திவாஸ், மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பூஜா கேத்கர், புனேவில் இருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

x