காதலியைக் கொன்ற காதலன் தூக்கிட்டு தற்கொலை: விடுதி அறையை உடைத்து உடல்களை மீட்ட போலீஸார்


சென்னையில் தங்கும் விடுதியில் காதலியைக் கொலை செய்து விட்டு வடமாநிலத்தைச் சேர்ந்த காதலனும் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் செல்லதுரைக்குச் சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 3-ம் தேதி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரசஞ்சித்கோஷ்(23), அவருடைய காதலி அற்பிடாபால் (20) ஆகியோர் தங்களை கணவன் , மனைவி எனக்கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இவர்கள் வந்த நாள் முதல் அறை கதவை பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. இன்று காலை அவர்கள் இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இதுகுறித்து விடுதி மேலாளர், திருவில்லிக்கேணி காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார், அறைக்கதவை உடைத்துச் சென்று பார்த்த போது உடல் அழுகிய நிலையில் அற்பிடபால் முகத்தில் தலையணை வைத்துவாறு பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதே போல் பிரசஞ்சித்கோஷ் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார். இதைக் கண்ட போலீஸார் உடனடியாக இரண்டு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முதற்கட்ட விசாரணையில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடியான இவர்கள் தாங்களை கணவன் ,மனைவி எனக்கூறி அறை எடுத்து தங்கியதும், 3 நாட்களுக்கு முன்பு காதலி அற்பிடாபாலை காதலன் பிரசஞ்சித்கோஷ் முகத்தில் தலையணையை வைத்து கொலை செய்து விட்டு நேற்று அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த ஜோடி எதற்காக இங்கு வந்தனர் ? பிரசஞ்சித்கோஷ் ஏன் தனது காதலியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

x