`பணி நிரந்தரம் செய்கிறோம்'- 135 பேரிடம் 4 கோடி சுருட்டிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி, வழக்கறிஞர்


போலி ஐஏஎஸ் சசிகுமார்

அதிமுக முன்னாள் முதல்வரின் உதவியாளர் பெயரைக் கூறி 4 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட போலி ஐ.ஏ.எஸ், வழக்கறிஞர் ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தமிழக வட்ட வழங்கல் அலுவலகத்தில் கணினி பதிவாளர் பிரிவில் 2008-ம் ஆண்டு முதல் தற்காலிக பணியாளராக பணிப்புரிந்து வருகிறார். இவர் உட்பட 135 பேருக்கு பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறி போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி, அதிமுக பிரமுகர், வழக்கறிஞர் ஆகியோர் கூட்டு சேர்ந்து 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகேயன், "கடந்த 2018-ம் ஆண்டு சேலம் மாவட்டம், மன்னராபாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன் என்பவர் மூலமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகுமார் மற்றும் வழக்கறிஞர் செல்வபாரதி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார், தனக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் உதவியாளர் இளங்கோ நெருங்கிய தோழர் என்றும் நபர் ஒருவருக்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் பணி நிரந்தரம் செய்து தருவதாக கூறினார்.

போலி ஐஏஎஸ் சசிகுமார்

இதனை நம்பி நானும் எனக்கு தெரிந்த 135 பேரிடம் இருந்து தலா 2 லட்சம் வீதம் சுமார் 4 கோடி ரூபாயை வாங்கி கொடுத்தேன். குறிப்பாக 4 கோடி ரூபாய் பணத்தை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வந்த சசிகுமாரிடம் நேரடியாக வழங்கினேன். பின்னர் பணி நிரந்தரம் செய்து விட்டதாக கூறி பணி நியமன ஆணை ஒன்றை சசிகுமார் காண்பித்தார். அது போலி நியமன ஆணை என்று சந்தேகமடைந்து அவரிடம் கேட்ட போது அது உண்மை என நம்ப வைக்கவேண்டி பலமுறை தன்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து சென்றுடன் அங்கு சம்மந்தபட்ட துறை அவலுவக அறையில் வைத்து நியமன ஆணையை காட்டி நம்ப வைத்தார்.

ஒரு கட்டத்தில் பணி நியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், சந்தேகமடைந்து அவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது செல்போன் எண் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததால் அதிர்ச்சியடைந்து சசிகுமாரை அறிமுகம் செய்து வைத்த அதிமுக பிரமுகர் ராமச்சந்திரனை நேரில் பார்க்க சென்றபோது அவர் கள்ள நோட்டு விவகாரத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகுமாரை தேடி சென்ற போது அவரும் டாக்டரிடம் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

வழக்கறிஞர் செல்வபாரதி

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இளங்கோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உதவியாளர் என பல அரசியல் பிரமுகர்கள் தனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று கூறியதை நம்பி பணத்தை இழந்ததேன். தங்கள் மீது புகார் அளித்தால் பணம் கிடைக்காது, அதுமட்டுமின்றி உன்னை கொலை செய்து விடுவேன் என வழக்கறிஞர் செல்வபாரதி மிரட்டு வருகிறார். எனவே ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்து 4 கோடி ரூபாய் மோசடி செய்த சசிகுமார், அதிமுக பிரமுகர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் செல்வபாரதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்" என்று கூறினார்.

x