திருமணத்தை மீறி ஏற்பட்ட தவறான உறவால் அண்ணியும், கொழுந்தனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள சிலவாட்டம் கிராமம் உள்ளது. இங்குள்ள வயல்வெளி பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் ஆண், பெண் இருவர் இன்று தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த பொதுமக்கள் மதுராந்தகம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்த ஆண் மற்றும் பெண் பிரேதங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தற்கொலை செய்து கொண்டவர்கள் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த அருள்ஜோதி(23), மதுரை மாவட்டம், சென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி(35) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பதும் கடந்த 4-ம் தேதி இவர்கள் இருவரும் காணாமல் போனார்கள் என்றும் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி பெரியப்பா மகன் என்பதும் தெரிய வந்தது. அருள்ஜோதி அருகில் இருக்கும் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவ்வாறு சென்றதால் அருள்ஜோதிக்கும், முத்துலட்சுமிக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. தகவல் தெரிந்த இரு குடும்பத்தினரும் இருவரையும் கண்டித்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு , காணாமல் போன இருவரும் மர்மமான முறையில் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவால் இருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.