உத்தரப்பிரதேசம்: மின்னல் தாக்கி தாய், மகள் உள்பட 11 பேர் பலி!


உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் தாய், மகள் உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதில் மாவட்டத்தின் சங்க்ராம்கர், ஜெத்வாரா, அன்டூ, மாணிக்பூர் மற்றும் கந்தாய் ஆகிய இடங்களில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதன்படி மாணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அட்டாலியா, அகோஸ் மற்றும் நவாப்கஞ்ச் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராந்தி விஸ்வகர்மா(20), குட்டு சரோஜ்(40) மற்றும் பங்கஜ் திரிபாதி(45) உட்பட 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். 24 வயதான ஷிவ் பட்டேல் மற்றும் மன்னாரில் வசிக்கும் மற்றொருவரும் மின்னல் தாக்கியதால் காயமடைந்து ரேபரேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கந்தை காவல் நிலையத்திற்குட்பட்ட புருஷோத்தம்பூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த அர்ஜூன் (45). அவரது மனைவி சுமன் (40) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். அம்ஹாரா கிராமத்தில் மின்னல் தாக்கியதால் ராம் பியாராய் என்ற பெண் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பரத்பூர் கிராமத்தில் மின்னல் தாக்கி ஆர்த்தி மிஸ்ரா( 40), அவரது மகள் அனன்யா மிஸ்ரா(15) உயிரிழந்தனர். இதேபோல், நயா பூர்வா பகுதியைச் சேர்ந்த சூர்யகலி(65) வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். ஆராதனா சரோஜ்( 48), பந்தோஹியில் வசிக்கும் விஜய் குமார் (45) வயலில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

x