அசாம் வெள்ளம்: காசிரங்கா தேசியப் பூங்காவில் 9 காண்டாமிருகங்கள் உள்பட 159 வன விலங்குகள் பலி!


கவுகாத்தி: அசாமில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காசிரங்கா தேசிய பூங்காவில் 9 காண்டாமிருகங்கள் உள்பட 159 வன விலங்குகள் உயிரிழந்துள்ளதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலம், காசிரங்கா தேசியப் பூங்கா 430 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இப்பூங்காவின் சில பகுதிகள் கோலாகாட் மாவட்டத்திலும், மற்ற பகுதிகள்நாகான் மாவட்டத்திலும் அமைந்துள்ளன. காசிரங்காவில் 2600-க்கும் மேற்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளன. இதுதவிர மேலும் பல ஆயிரக்கணக்கான வன விலங்குள் உள்ளன.

இந்நிலையில் அங்கு பெய்த கனமழை காரணமாக பூங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏராளமான வன விலங்குகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக பூங்காவின் கள இயக்குநர் சோனாலி கோஷ் கூறுகையில், "காசிரங்கா தேசிய பூங்காவில் இதுவரை 159 வன விலங்குகள் வெள்ளம் காரணமாக இறந்துள்ளன.

இதில், 128 பன்றி மான்கள், 9 காண்டாமிருகங்கள், 2 சதுப்பு மான்கள், 2 சாம்பார் மான்கள் ஆகியவை வெள்ளத்தில் மூழ்கி இறந்தன. மேலும், 12 பன்றி மான்கள், ஒரு சதுப்பு மான், ரீசஸ் மக்காக் (குரங்கு), நீர்நாய்க் குட்டி ஆகியவை பராமரிப்பின் கீழ் இறந்தன. 2 பன்றி மான்கள், வாகனம் மோதி இறந்தன.

மேலும் ஒரு நீர்நாய் வேறு காரணத்தால் உயிரிழந்தது. மீட்கப்பட்ட 2 காண்டாமிருக குட்டிகள், இரண்டு யானைக் குட்டிகள் உட்பட 7 விலங்குகள் தற்போது சிகிச்சையில் உள்ளன.” என்றார். பூங்கா நிர்வாகமும் வனத்துறையும் இணைந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 133 வன விலங்குகளை மீட்டு, 111 விலங்குகள் சிகிச்சைக்குப் பின் விடுவிக்கப்பட்டன.

காசிரங்கா தேசிய பூங்காவில் வெள்ள நிலைமை ஓரளவு மேம்பட்டு வருகிறது. அப்பூங்காவில் மொத்தம் 233 வன முகாம்கள் உள்ளன. இவற்றில் 62 வன முகாம்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 4 முகாம்கள் காலி செய்யப்பட்டுள்ளன.

x