அருப்புக்கோட்டை அருகே இரவு நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நிர்வாணமாக நுழைந்த வாலிபர், செவிலியரின் கன்னத்தைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 24 மணி நேரம் செயல்படும் இந்த நிலையத்தில் 3 மருத்துவர்கள், 5 செவிலியர்கள், 4 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், காவல் பணிக்கு காவலாளிகள் இல்லை.
இந்த நிலையில் நேற்று இரவு ஆரம்ப சுகாதார நிலையம் வந்த வாலிபர் ஒருவர், தனது ஆடைகள் அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு நிர்வாணமாக நடந்து வந்தார். அப்போது அங்கு தங்கும் விடுதியில் இருந்து வெளியே வந்த செவிலியரைப் பாய்ந்து முகத்தில் கடித்துக்குதறினார். இதனால் அலறித்துடித்த செவிலியரின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் விடுதிக்குள் சென்று செவிலியரின் ஆடையை மாட்டிக் கொண்டு அங்கேயே அமர்ந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் பாளையம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த செவிலியர் அருப்புக்கோட்டை அரசு மருத்துகூமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காவலர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ ஊழியர்களும், அப்பகுதி மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.