பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு: 65 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண்


சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 65 மாணவர்கள் 200-க்கு 200 பெற்று முழு கட்ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர். சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதியும், பொதுப் பிரிவினர் கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதியும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.50 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் சேர 2 லட்சத்து 53,954 பேர் இணைய வழியில் விண்ணப்பம் பதிவு செய்தனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 24,787 அதிகம். அவர்களில் 2 லட்சத்து 9,645 பேர் பதிவு கட்டணம் செலுத்தி முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்திருந்தனர். அதில் தகுதியின்மை காரணமாக 9,777 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரு லட்சத்து 12,731 மாணவர்கள், 87,134 மாணவிகள், 3 மூன்றாம் பாலினத்தவர் என ஒரு லட்சத்து 99,868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை சென்னையில் தொழில்நுட்ப கல்வித் துறை ஆணையர் வீரராகவ ராவ் நேற்று வெளியிட்டார். மொத்தம் 65 மாணவர்கள் 200-க்கு 200 பெற்று முழு கட்ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

அதன்படி, பொதுப் பிரிவில் என்.தொசிதா லட்சுமி (செங்கல்பட்டு), கே.நிலஞ்ஜனா (திருநெல்வேலி), கோகுல் (நாமக்கல்) ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். அரசு பள்ளி பிரிவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த மாணவர்களில் எஸ்.ரவணி (சேலம்), கிருஷ்ணா அனூப் (கோவை), எம்.சரவணன் (வேலூர்) ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 102 பேர் முழு கட்ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தனர்.

கலந்தாய்வு குறித்து ஆணையர் வீரராகவ ராவ் கூறியதாவது: மாணவர்கள் தங்களது தரவரிசை விவரங்களை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவர்த்தி செய்துகொள்ள ஜூலை 18-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் தெரிவிக்கும் குறைகளில் நியாயம் இருந்தால், அவை ஆராயப்பட்டு உடனே சரிசெய்யப்படும்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை 22-ல் தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதிக்குள் முடிக்கும் விதமாக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் (7.5% ஒதுக்கீடு), விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பார்கள்.

அதன்பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29-ல் தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடைபெறும். மேலும், துணை கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 8-ம் தேதி வரையும், எஸ்.சி. பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10, 11-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இதுதவிர, நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்கள் எண்ணிக்கை விவரம் ஜூலை 15-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவரும் கல்லூரிகளை தேர்வு செய்யும்போது அதிக அளவிலான விருப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், கல்லூரியின் வரிசை எண், தேர்ச்சி விவரம் உள்ளிட்ட அம்சங்களை ஒப்பிட்டு அவற்றை கவனத்துடன் தேர்வு செய்வது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் டி.புருஷோத்தமன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்

x