ஏடிஎம் மையங்களில் முதியவர்களைக் குறிவைத்த பிஹார் கும்பல்: சிசிடிவி காட்சிகளை வைத்து சுற்றி வளைத்த போலீஸ்


கைது செய்யப்பட்டவர்கள்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் முதியவர்களிடம் நூதன முறையில் லட்சக்கணக் கில் கொள்ளையடித்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கும்பல் சென்னையில் பிடிபட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடி பி.வி காலனி பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(54). இவர் திருவொற்றியூரில் உள்ள ரேஷன் கடையில் எடை மதிப்பீட்டாளராக உள்ளார். இவர் கடந்த 26-ம் தேதி அம்பேத்கர் கல்லூரி எதிரே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றார். அப்போது ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. அப்போது பின்னால் இருந்த நபர் தான் பணத்தை எடுத்து தருவதாக கூறி அவரது ஏடிஎம் கார்டு பற்றும் பாஸ்வேர்ட் எண்ணை வாங்கினார். முதியவரின் வங்கிக் கணக்கில் இருந்த தொகையை ஆய்வு செய்து விட்டு பணம் வரவில்லை என்று ஏடிஎம் கார்டைக் கொடுத்து விட்டுச் சென்றார். இதை நம்பிய புண்ணியமூர்த்தி பணம் வரவில்லை என நினைத்து வேலைக்கு சென்று விட்டார்.

அன்று மாலை புண்ணியமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது வங்கி கணக்கில் இருந்து 1.15 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஏடிஎம் கார்டை பார்த்த போது அது அவரது கார்டு இல்லையென்பது தெரிய வந்தத. இதையடுத்து அவர் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஏடிஎம் மைய சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் முதியவருக்கு உதவி செய்வது போன்று நடித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து புண்ணியமூர்த்திக்கு வந்த குறுந்தகவலை போலீஸார் ஆய்வு செய்த போது 40 ஆயிரம் ரூபாய் ஏடிஎம்மில் எடுத்து இருப்பதும், மீதி பணத்திற்கு பிரபல நகைக்கடையில் நகை வாங்கியது போன்றும் குறுந்தகவல் இருந்தது. அந்த நகைக் கடைக்குச் சென்று போலீஸார் விசாரித்த போது வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர், நகை வாங்கியது சிசிடிவில் பதிவாகியிருந்தது. பின்னர் செல்போன் டவர் லொகேஷனை வைத்து விசாரணை நடத்தி மீஞ்சூரில் பதுங்கி இருந்த வட மாநிலத்தவர்களைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

சிக்கிய ஏடிஎம் கார்டுகள்.

விசாரணையில் அவர்கள், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பகாளி குமார்(29), மனோஜ் குமார் ஷானி(28), அஜய் குமார் (26) என்பதும் தெரியவந்தது. இவர்கள் சென்னையில் பல பகுதிகளில் முதியவர்களை மட்டுமே குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1.5 சவரன் செயின் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம், 50 போலி ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x