ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 8 ஆயிரம் வட்டி: மோசடி நிறுவனத்தில் போலீஸ் அதிரடி சோதனை


1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறி மோசடி செய்த நிறுவனங்களுக்கு சொந்தமான 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஸ்பைசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆகாஷ் ஸ்பைசஸ் லிமிடெட். இந்த நிறுவனம் மசாலா பொருட்கள், மிளகு, ஏலக்காய், தேயிலை உள்ளிட்ட பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த நிறுவனம் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 8 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், 24 மாதங்களில் 10 லட்ச ரூபாய் வட்டி கொடுப்பதாக பொய்யான வாக்குறுதிகள் அளித்து விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய பொதுமக்கள் பலர் அதிக வட்டி கிடைப்பதாக நினைத்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் மத்திய அரசின் ஒழுங்கற்ற முதலீடு திட்ட தடுப்பு சட்டத்தின் கீழ் ஸ்பைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆகாஷ் ஷ்ருதி ஸ்பைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான துரைராஜ் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் இந் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் தாம்பரம் மற்றும் முகப்பேரில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொள்ள சென்றபோது அந்த இரண்டு இடங்களிலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அலுவலகம் மாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் இடத்தின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இதே நிறுவனம் மீது பெங்களூருவில் உள்ள ராஜகோபாலபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x