முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு மதுரையில் உள்ள 11 தாலுகாக்களுக்கும் ஒரே ஒரு மையம் இயங்கி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2009-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளியோர் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளும் வகையில் 'கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' என்ற பெயரில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் துவக்கி வைத்தார். தொடர்ந்து, 2011-ம் ஆண்டு இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்துக் கொள்ள மாவட்டம் தோறும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடிய மையங்கள் இயங்கி வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி, மேலூர், பேரையூர், சோழவந்தான், மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உள்பட 11 தாலுகாக்களுக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே ஒரு விண்ணப்பிக்கும் மையமே இயங்கி வருகிறது. இதனால், பதினோரு தாலுகாக்களில் இருந்து வரக்கூடிய மக்கள் காலையிலிருந்து மாலை வரை வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து விண்ணப்பித்துவிட்டு புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். இதனால், விண்ணப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவதோடு, வெகு தொலைவில் இருந்து மதுரைக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுகுறித்து காப்பீட்டு திட்டத்திற்காக விண்ணப்பிக்க வந்திருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத நபர் நம்மிடம், "நான் கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் பயணம் செய்து வந்துள்ளேன். எங்களைப் போன்று தினக்கூலி அடிப்படையில் வேலை செய்பவர்கள் காலையில் வந்தால் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு மதியம் தான் வீடு திரும்ப முடிகிறது. ஒரு நாள் வருமானமே இல்லாமல் போய்விடுகிறது. அதிலும் ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் திருப்பி அனுப்பி விடுகின்றனர். மீண்டும் அவற்றை சரி செய்து விட்டு வந்து விண்ணப்பிப்பதற்குள் போதும், போதும் என்று ஆகிவிடுகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு இதற்கான பயணச் செலவும் அதிகம் தான். எனவே, அந்தந்த தாலுகாக்கள் வாரியாக விண்ணப்பிக்கும் மையங்கள் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.