ஓடும் ரயிலில் பெண் காவலரை கத்தியால் குத்திய வியாபாரி கைது


தனசேகர்.

ஓடும் ரயிலில் பெண் ரயில்வே காவலரை கத்தியால் குத்திய வியாபாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த 23-ம் தேதி இரவு கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் ஆர்பிஎஃப் பெண் காவலர் ஆஷீர்வா(29) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த பெட்டியில் பயணித்த ஒரு ஆண் நபரை ஆஷீர்வா கீழே இறங்குமாறு கூறியுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த அந்த நபர், ஆஷீர்வாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நெஞ்சு, கழுத்து பகுதியில் குத்தினார். இதில் படுகாயமடைந்த காவலர் ஆஷீர்வா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்பினார்.

ஆஷீர்வா

அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து பின்னர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பியோடிய மர்ம நபரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில்பெண் காவலர் ஆஷீர்வாவை கத்தியால் குத்தி விட்டு தலைமைறைவான பூக்கடை பகுதியைச் சேர்ந்த தனசேகர்(40) என்பவரை எழும்பூர் ரயில்வே போலீஸார் இன்று கைது செய்தனர். விசாரணையில் திண்டிவனத்தைச் சேர்ந்த தனசேகர் தனது குடும்பத்துடன் பூக்கடை பகுதியில் சாலையோரம் தங்கி ரயிலில் திண்படங்கள் விற்பனை செய்து வந்ததும், இவரது மனைவி பூக்கடையில் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் தனசேகர் ரயிலில் காலக்கட்டத்திற்கு ஏற்றாற் போல் பூ, பழம், சமோசா, விற்று வந்துள்ளார். மேலும், ரயிலில் பெண்கள் பெட்டியில் தின்பண்டங்களை விற்ற செல்லும் போது பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் பொருட்களை விற்க விடாமல் தன்னை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டு தொடர்ந்து அவமானப்படுத்தி வந்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறியுள்ளார். மேலும், சம்பவத்தன்று குடிபோதையில் பெண்கள் பெட்டியில் யாரும் இல்லாததால் அதில் ஏறியதாகவும், அப்போது பெண் காவலர் தடுத்ததால் ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட தனசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளை ரயில்வே போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

x