`5,200 விநாயகர் சிலைகள் வைக்கிறோம்; காவல்துறை கூறிய அதை ஏற்க மாட்டோம்'- இந்து அமைப்புகள் கூட்டாக பேட்டி


சென்னையில் 5,200 விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம் என்று விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 65 இந்து அமைப்புகளுடன் இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் அன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய இந்து சத்ய சேனா நிர்வாகி வசந்த குமார், "கடந்த 2018-ம் ஆண்டு நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளின் படி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட வேண்டும் என காவல்துறை கூறியுள்ளது. அதை நாங்கள் கடைப்பிடிக்க தயாராக உள்ளோம். மத நல்லிணத்துக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் விநாயகர் சதூர்த்தியை கொண்டாடுவதற்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கி இருக்கின்றனர். விநாயகர் சிலை வைக்கும் இடத்திற்கு மின்சாரம் தேவைப்படுவதால் மின்சார பயன்பாட்டிற்காக மின்சார வாரியத்தில் முன்பணமாக 7000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்திவிட்டு சிலைகளை வைத்து வருகிறோம். கடந்த 2018-ம் ஆண்டு மின்வாரியத்தில் கட்டிய முன்பணம் இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை. எனவே இந்த முறையும் அதே தவறு நடக்காமல் இருக்க மின்வாரியம் வழிவகை செய்து, சிலையை எடுத்த உடனே பணத்தை திருப்பி தரவேண்டும்.

விநாயகர் சிலை வைக்கும் முன் இடத்தின் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்று சிலைகளை வைக்க வேண்டும் என காவல்துறை கூறியதை நாங்கள் ஏற்க மாட்டோம். சென்னை மாநகரங்களில் அனைத்து இந்து அமைப்புகளும் இணைந்து 5,200 சிலைகளை வைக்க உள்ளோம். செப்டம்பர் 4-ம் தேதி வரை சிலைகள் கரைக்கப்படும். 10 அடிக்கு குறைவாக சிலைகளை வைக்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

x