பல வருடங்களாக உயர் ரக சைக்கிள்களை குறி வைத்து திருடும் பட்டதாரி வாலிபரை கைது செய்துள்ள காவல்துறையினர், 41 சைக்கிள் பறிமுதல் செய்துள்ளதோடு, 20 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், தனது வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்த 20 ஆயிரம் மதிப்புடைய சைக்கிள் காணாமல் போய்விட்டதாகவும் அதனை கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, மேற்கு மாம்பலம், அசோக் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் சைக்கிள்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது தெரியவந்தது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பயன்படுத்தும் உயர்ரக சைக்கிள்களும் தொடர்ந்து திருட்டு போன நிலையில் இதுகுறித்தும் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் அனைத்து கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் தான் என்பதை கண்டுபிடித்தனர். மேலும் சிசிடிவியில் பதிவான அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்கிற பாபு என்பது தெரியவந்தது. இவர் சைக்கிள்களை மட்டுமே குறிவைத்து திருடும் பிரபல கொள்ளையன் என்பதும், 2014-ம் ஆண்டு கே.கே.நகர் காவல் நிலையத்தில் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இவரை பிடிக்க காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள சைக்கிள் பஞ்சர் போடும் கடைகள் மற்றும் பழுது பார்க்கும் கடைகளில் திருடன் வெங்கடேஷின் அடையாளங்கள் கொடுக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். இந்நிலையில் மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள சைக்கிள் கடைக்கு வெங்கடேஷ் சைக்கிளில் காற்று அடிக்க வந்ததாக தகவல் கிடைத்தை அடுத்து போலீஸார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடம்பத்தூரில் வசித்து வரும் வெங்கடேஷ், நாள்தோறும் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ சென்னைக்கு வந்து பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு அங்குள்ள சைக்கிளை மட்டுமே குறிவைத்து இரவு நேரங்களில் திருடியதாக தெரிவித்துள்ளார். மேலும் இருசக்கர வாகனங்களை திருடினால் போலீஸார் சிசிடிவி காட்சிகளில் பதிவான நம்பர் பிளேட்டை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடுவதுடன் திருட்டு பைக்கிற்கு ஆர்சி புக் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் விற்க முடியாத நிலைமை ஏற்படக்கூடும் என்பதால் சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடுவதாகவும், அதிலும் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள விலையுயர்ந்த சைக்கிள் பூட்டு போடாமல் நிறுத்தி இருக்கும் என்பதால் அதை நோட்டமிட்டு திருடிவிட்டு, திருடிய சைக்கிள் ரிப்பர் எனக்கூறி ஆட்டோவில் ஏற்றிச் சென்று திருடிய சைக்கிளை சைக்கிள் ஷோரூம் மற்றும் கடைகளில் 2000 முதல் 3000 ரூபாய்க்கு விற்பதால், அதிக லாபம் கிடைக்கும் என நினைத்து கடைகளில் சைக்கிளை வாங்கி கொள்வதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
திருடிய 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிள் என்றாலும் தனக்கு தேவைப்படும் 2000 ரூபாய்க்கு தான் விற்பனை செய்வதாகவும் கிடைக்கும் பணத்தை குடிக்கவும், உல்லாசமாக இருக்கவும் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 100க்கும் மேற்பட்ட சைக்கிளை வெங்கடேஷ் திருடி சென்னை முழுவதும் விற்பனை செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பட்டதாரியான வெங்கடேஷ் படிப்பிற்கு ஏற்ப சரியான வேலை கிடைக்காததால் எளிதாக பணம் சம்பாதிக்க சைக்கிள் திருடும் தொழிலில் இறங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட வெங்கடேஷிடமிருந்து 41 சைக்கிளை பறிமுதல் செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.