லவ் ஜிஹாத்தால் நடந்ததா நேஹா கொலை? குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்


ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா கொலை வழக்கில் நீதிமன்றத்தில் 483 பக்க குற்றப்பத்திரிகையை சிஐடி அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் உள்ள தர்வாட் மகாநகர பாலிகாவைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமத். இவரது மகள் நேஹா. இவர் பிவிபி கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி கல்லூரி வளாகத்தில் ஃபயாஸ் என்ற வாலிபர் நேஹாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்குப் பின்னணியில் லவ் ஜிஹாத் இருப்பதாக நேஹாவின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத் மற்றும் பாஜக, இந்து ஆதரவு அமைப்புகள் குற்றம் சாட்டின. அத்துடன் மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த சிஐடி அதிகாரிகள், கொலை நடந்த 81 நாட்களுக்குப் பின் 483 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் லவ் ஜிஹாத் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நேஹா திருமணம் செய்ய மறுத்ததற்காக ஃபயாஸ் கொலை செய்ததாக சிஐடி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். குற்றப்பத்திரிகையில், நேஹாவின் தந்தை, தாய், சகோதரர், வகுப்பு தோழர்கள், தோழிகள், பிவிபி கல்லூரியின் விரிவுரையாளர்கள் என 99 சாட்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நேஹா ஹிரேமத் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் இருவரும் ஹூப்ளியில் உள்ள பிசி ஜாபின் கல்லூரியில் பிசிஏ படித்துக் கொண்டிருந்தபோது வகுப்புத் தோழர்கள். இருவரும் ஆரம்பத்தில் நண்பர்கள். இதன் பிறகு ஃபயாஸ் நேஹாவை காதலிக்க ஆரம்பித்தார். 2024 மார்ச் மாதம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸுடன் பேசுவதை நேஹா நிறுத்தினார். இதனால் விரக்தியடைந்த ஃபயாஸ் நேஹாவை கொலை செய்ய முடிவு செய்தார்.கொலை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன், ஏப்ரல்15-ம் தேதி தார்வாட்டில் உள்ள ஆர்யா சூப்பர் பஜாரில் ஃபயாஸ் கத்தி வாங்கினார். அவர் கத்தியை வாங்கும் சிசிடிவி காட்சிகள் சிஐடி அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. பின்னர் அவர் நியூ சாய் கார்மென்ட்டில் இருந்து சிவப்பு தொப்பி ஒன்றை வாங்கினார்.

பின்னர், ஏப்ரல் 18-ம் தேதி பிவிபி கல்லூரிக்கு வந்த ஃபயாஸ், நேஹாவிடம், “இவ்வளவு நாள் காதலித்து இப்போது ஏமாற்றுகிறாயா? நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டீயா? உன்னை விடமாட்டேன்" என்று கூறி கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு கத்தியை விட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ​ குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் மீது 302, 341, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

x