அடுத்த ஹிட் அண்ட் ரன் சம்பவம்... கார் மோதி தூக்கி வீசப்பட்ட பெண் பலி


மகாராஷ்டிராவில் ஹிட் அண்ட் ரன் சம்பவத்தால் மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிடேவியின் சிவசேனா பிரிவைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஷா. இவரது மகன் மிஹிர் ஷா, ஜூலை 7-ம் தேதி வோர்லி பகுதியில் மதுபோதையில் தனது தந்தைக்குச் சொந்தமான பென்ஸ் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது மார்க்கெட்டில் மீன் வாங்கிக் கொண்டு கணவர் பிரதீப்புடன் டூவீலரில் சென்றுக் கொண்டிருந்த காவேரி நக்வால் எனும் பெண் மீது மிஹிர் ஷா ஓட்டிச் சென்ற கார் மோதியது. அத்துடன் கார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை அவரை இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதன் பின் காரை நிறுத்திய மிஹிர் ஷா காரில் சிக்கியிருந்த காவேரி நக்வாவை வெளியே கொண்டு வந்துள்ளார். பின்னர் காரை ஓட்டுநர் ராஜ்ரிஷி பிதாவத்திடம் இயக்க கொடுத்து விட்டு மிஹிர் ஷா எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டுள்ளார். அங்கிருந்து கிளம்பும் போது ரிவர்ஸ் கியரில் இயங்கிய கார் மீண்டும் ஒருமுறை காவேரி நக்வா மீது மோதியது. இதில் காவேரி நக்வா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மிஹிர் ஷாவை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த சுவடு மறையும் முன் அடுத்த அதிர்ச்சி சம்பவம், மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கில் நேற்று நடைபெற்றுள்ளது. கங்காபூர் பகுதியில் வேகமாக வந்த கார் மோதி வைஷாலி ஷிண்டே(36) என்ற பெண் 20 அடி தூரம் போய் விழுந்தார். ஆனால் மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது. அப்போது சாலையில் நின்ற இருவர், படுகாயமடைந்த வைஷாலியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் வெள்ளை நிற கார் ஒன்று வைஷாலி ஷிண்டே மீது மோதிய வீடியோ காட்சி வெளியானதையடுத்து இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x