அதிகம் கடன் வாங்குகிறது அதானி குழுமம்: எச்சரிக்கும் மதிப்பீட்டாளர் நிறுவனம்


வணிக வட்டாரங்களில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களாலும் அதிகம் கவனிக்கப்படும் தொழில் நிறுவனம் கௌதம் அதானி தலைமையிலான தொழில் குழுமம்தான். உலகிலேயே மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழும் அதானி, தொடாத துறையே இல்லை என்கிற அளவுக்கு எல்லாத் துறைகளிலும் முதலீடு செய்கிறார். ஏற்கெனவே நடந்துவரும் பிற தொழில் நிறுவனங்களை அப்படியே வளைத்துப் போடுகிறார். என்னதான் ஆளுங்கட்சியின் ஆதரவு இருந்தாலும் ஒரு தொழிலதிபரால் சுயமான முயற்சி, முதலீடு இல்லாமல் இத்தனைத் தொழில்களில் இப்படி ஒரே சமயத்தில் இறங்க முடியாது என்பதும் உண்மை.

இவ்வாறு சக தொழிலதிபர்களாலும் ஏக்கத்துடன் பார்க்கப்படும் கௌதம் அதானி (60), என்ன உத்தியைக் கையாள்கிறார் என்பது பாமரர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் காலங்காலமாகப் பல தொழிலதிபர்கள் கடைப்பிடிக்கும் ‘முறையான’ முதலீட்டு உத்திதான் அது. பெருந்தொழிலதிபர்களும் வியாபாரிகளும் தங்களுடைய நிறுவனத்துக்குத் தேவைப்படும் முதல் அனைத்தையும் தாங்களே செலுத்தி தொழிலை நடத்த மாட்டார்கள். தொழில் நிறுவனத்தின் நிதி – நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தும் தங்கள் கைகளில் இருக்கும் அளவுக்குத் தேவைப்படும் நிதியை மட்டும் தங்கள் பங்காக முதலீடு செய்வார்கள். எஞ்சியதை அந்தந்தத் தொழில்களுக்குரிய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெறுவார்கள். அதானி மட்டுமல்ல எல்லாத் தொழிலதிபர்களுமே கையாளும் உத்திதான் இது.

இதில் மற்றவர்களுக்கு இல்லாத மனோ தைரியம் அதானிக்கு இருப்பதால் ஏராளமான தொகையைக் கடனாக வாங்கி புதிய தொழில் நிறுவனங்களை வளைத்துப் போடுகிறார். மனோதிடம் என்று சொல்வதற்குக் காரணம் கோவிட் 19 பெருந்தொற்று, பிறகு சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கை, ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள், சீனா – தைவான் உரசல் என்று உலக தொழில் – வணிக சூழலே நிச்சயமில்லாத நிலையில் இருக்கும்போது அதானி பெரும் தொகைகளைக் கடனாகவே வாங்கி முதலீடு செய்கிறார். 2022 நிதியாண்டு முடியும்போது அதானி குழுமத்தின் மொத்தக் கடன் அளவு ரூ.2,30,900 கோடியாக இருக்கும். பெரிய தொழிலதிபர்கள் சிறப்பான நிர்வாகம் மூலமும் விரைவான நடவடிக்கைகள் மூலமும் கடன்களை அடைப்பார்கள். எனவே நிதி நிறுவனங்களும் வங்கிகளும் கடன்தரத் தவறுவதில்லை. கடன் தருவது அரசுத் துறை நிதி நிறுவனங்கள் மட்டுமல்ல, தனியார் நிதி நிறுவனங்களும்தான். இதுவே பெரிய தொழிலதிபர்களின் வளர்ச்சியின் ரகசியம்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிட்ச் கடன் தர நிறுவனத்தின் ‘கிரெடிட் சைட்ஸ்’ என்ற சார்பு அமைப்பு இந்தக் கடன் அளவு பற்றிக் கூறிவிட்டு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. குழுமம் எதிர்பார்க்கும் வகையில் செயல்கள் நடைபெறாவிட்டால், மிகப் பெரிய கடன் பொறியில் நிறுவனம் சிக்கும், அதனால் அதன் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்கிறது. இது தொழில் நிறுவனத்தைவிட பங்குச் சந்தையில் அதன் பங்குகளை வாங்கி – விற்பவர்களுக்கான எச்சரிக்கை என்றே கருதப்பட வேண்டும்.

1980-களில் பலசரக்கு வியாபாரியாகத்தான் தொழிலில் இறங்கினார் அதானி. பிறகு சுரங்கங்கள், துறைமுகங்கள், மின்னுற்பத்தி நிறுவனங்கள், விமான நிலையங்கள், தரவு மையங்கள், ராணுவத்துக்குத் தேவைப்படும் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் என்று பலவற்றிலும் ஒவ்வொன்றாக முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்தினார்.

சமீபத்தில் ஹோல்சிம் என்ற சிமென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய உற்பத்திப் பிரிவுகளை 1,050 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியிருக்கிறார். அத்துடன் அலுமினிய உற்பத்தியிலும் இறங்கியிருக்கிறார். இதற்கான முதலீட்டில் பெரும்பகுதி கடனாகப் பெறப்பட்டவைதான். சமீப காலமாக அதிக முதலீடு தேவைப்படும் தொழில்களில் புதிதாக முதலீடு செய்கிறது அதானி குழுமம். இவற்றில் பலவற்றில் அதற்குத் தொழில் அனுபவம் கிடையாது. சிலவற்றுக்கு அது ஏற்கெனவே செய்துவரும் தொழில்களுடன் எந்தவித உற்பத்தித் தொடர்புகளும் கிடையாது. எனவே கடன் மதிப்பீட்டு நிறுவனம் இதைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது. அதானி குழுமம் பல ஆண்டுகளாகத் தொழிலில் இருந்தாலும் நிர்வாக, சுற்றுச்சூழல், சமூக இடர்ப்பாடுகளை அதிகம் சந்தித்ததில்லை. அதே சமயம் அதானி என்டர்பிரைசஸ் என்ற அதன் கேந்திர நிறுவனம் வலுவான, நிலையான நிறுவனங்களாக தனது தொழில்குழும நிறுவனங்களை வளர்த்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அதானி குழுமத்தின் ஆறு பெரிய நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில் பட்டியல் நிறுவனங்களாக இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் பத்திரங்கள் மூலம் நிதி பெற்று தொழிலை நடத்துகின்றன. 2022 நிதியாண்டு முடிவில் அந்த ஆறு நிறுவனங்கள் மட்டும் பெற்றுள்ள மொத்தக் கடன் அளவு ரூ.2,30,900 கோடி. நிறுவனங்களின் கையில் உள்ள ரொக்க இருப்பைக் கழித்தால் அந்தக் கடன்களின் நிகர மதிப்பு ரூ.1,72,900 கோடி.

அதானி குழுமம் ஏற்கெனவே நடத்திவரும் நிறுவனங்களுக்கும் புதிதாக வாங்கும் நிறுவனங்களுக்கும் முதலீடு தேவைப்பட்டால் கடன் வாங்கத் தயங்குவதில்லை நிர்வாகம். இந்தியாவில் ரிலையன்ஸ், டாடா தொழில் குழுமங்களுக்கு அடுத்த இடத்தில் அதானி குழுமம் இருக்கிறது. அதானி குழுமங்களின் மொத்த சந்தை மதிப்பு 20,000 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேல்.

தாமிரம் சுத்திகரிப்பு, பெட்ரோ ரசாயனத் தொழில்கள், தகவல் தொடர்புத் துறை, அலுமினியம் உற்பத்தி ஆகியவற்றில் அதானி குழுமம் சமீப காலத்தில் முதலீடு செய்திருக்கிறது. ஆனால் அந்தத் தொழில் குடும்பத்துக்கு இந்தத் துறைகளில் அதிக முன் அனுபவம் கிடையாது. இந்நிறுவனங்கள் லாபம் தரக்கூடியவைதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில் இவற்றால் அதிக லாபம் சம்பாதிக்க முடியாது. எனவே இதற்கு வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதும் அசலில் ஒரு பகுதியைத் திரும்பச் செலுத்துவதும் சவாலான வேலையாகவே இருக்கும். அதுவரை அந்தத் தொழில்களில் உற்பத்தி தொடர வேண்டும், சந்தையில் கேட்பு நீடிக்க வேண்டும், வேறு புறக் காரணிகள் ஏதும் அதற்கு இடையூறாக வந்துவிடக் கூடாது. இதைத்தான் கடன் மதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. எனவே தொடக்க காலத்தில், உள்ளூர் வணிகர்கள் சொல்வதைப் போல, வேறு தொழில் நிறுவனங்களில் கிடைக்கும் கூடுதல் வருவாயைப் புரட்டி, இவற்றில் போட வேண்டும்.

அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் (ஏ.இ.எல்) நிறுவனம்தான் அதானி குழுமத்தின் செவிலித்தாய் நிறுவனம். புதிய விமான நிலையங்கள், சிமென்ட் உற்பத்தி, தாமிரம் சுத்திகரிப்பு, தரவுகள் மையம், பசுமை ஹைட்ரஜன் தயாரிப்பு, தேசிய நெடுஞ்சாலையமைத்தல், சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பு ஆகியவற்றுக்கு அதுதான் அதிகம் மூலதனத்தைப் பெற்று முதலீடு செய்திருக்கிறது. இவற்றைப் போல கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படும் பிற தொழில்களையும் அடையாளம் கண்டிருக்கிறது. ஆண்டுக்கு 41 லட்சம் டன் அலுமினியம் தயாரிக்கும் சுத்திகரிப்பாலையையும் 300 லட்சம் டன் இரும்புத் தாது தயாரிக்கும் நிறுவனத்தையும் ரூ.58,000 கோடி மதிப்பீட்டில் ஒடிசாவில் வாங்கியிருக்கிறது.

அதானி குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாகக் குழுவில் கௌதம் அதானி (60), சகோதரர் ராஜேஷ் அதானி, மகன் கரண் அதானி, சகோதரி மகன் சாகர் அதானி, இன்னொரு சகோதரி மகன் பிரணவ் அதானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் கௌதம் அதானிக்கு மட்டுமே தொழில் அனுபவம் அதிகம். மற்றவர்கள் அதிக அனுபவம் இல்லாதவர்கள். அடுத்த பத்தாண்டுகளில் அடுத்த தலைமுறையிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்க அவர்களைத் தயார் செய்கிறார் கௌதம். இதையும் கவனத்தில் வைத்தே கடன் நிறுவனம் முதலீட்டாளர்களை எச்சரிக்கிறது என்று கருதலாம்.

x