இந்தியாவில் முதல் முறையாக அரசே தொடங்கும் டாக்ஸி, ஆட்டோ சேவை; கேரள அரசின் கலக்கல் திட்டம்: செயலிக்கு காத்திருக்கும் மக்கள்


பெருநிறுவனங்களுக்கு சவால்விடும்வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக கேரள அரசு, ஆன்லைன் டாக்ஸி சேவையை துவங்கியுள்ளது. டாக்ஸி சேவை என்று திட்டத்திற்கு பெயர் இருந்தாலும் இதில் டாக்ஸி மட்டுமல்ல, ஆட்டோவும் இருக்கிறது. சம்பிரதாயமாக இதை முதல்வர் பினராயி விஜயன் தொடக்கி வைத்துவிட்டாலும், விரைவில் வர இருக்கும் கேரள சவாரி செயலிக்காக காத்திருக்கிறார்கள் மக்கள்.

இப்போதைய சூழலில் தலைநகர் திருவனந்தபுரத்தில் மட்டும் துவங்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தில் 321 ஆட்டோ, 228 கார்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. அதிலும் தனித்து செல்லும் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும்வகையில் 22 பெண் ஓட்டுனர்களும் உள்ளனர். செயலின் வழியே பெண்கள் விரும்பினால் பெண் ஓட்டுனரைத் தேர்வுசெய்து கொள்ளமுடியும். குறைவான வாடகை, பாதுகாப்பான பயணம் இவை இரண்டும் இத்திட்டத்தின் நோக்கம் எனச் சொல்லும் கேரள தொழில்துறை அமைச்சர் சிவன்குட்டி, காவல்துறையிடம் இருந்து ஒழுக்கச்சான்று பெற்றுவரும் ஓட்டுனர்களை மட்டுமே திட்டத்தில் இணைக்கும்வகையில் வடிவமைத்திருப்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

கேரள சவாரியில் பதிவு செய்து பயணிப்போருக்கு வசதியாக பிரத்யேக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளேஸ்டோரிலும் இந்த செயலி உள்ளது. அது கூகுளின் தர ஆய்வில் உள்ளதால் சில தினங்களில் செயலியாகவும் முழுமூச்சில் பயன்பாட்டுக்கு வரும். அதன்வழியாக பயணிகள் பதிவுசெய்ய முடியும். கேரள தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும், மோட்டார் தொழிலாளர் நலவாரியம் கேரள சவாரி திட்டத்தை நிர்வகிக்கின்றது. தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், நுகர்வோர் உரிமைமீறல்கள் நடப்பதாகவும் தொடர்ந்து மாநில அரசுக்கு புகார்கள் சென்றது. பள்ளி, கல்லூரி, அலுவலக நேரமான ‘பீக் ஹவர்ஸில்’ கூடுதல் கட்டணம் தொடங்கி, ரத்துசெய்யப்பட்ட சவாரிக்கும் முழுக்கட்டணம் வசூல்செய்வது வரை அரசிற்கு பலகட்ட புகார்கள் வந்தததே ‘கேரள சவாரி’ திட்டம் பிறக்கவும் வழிவகுத்துள்ளது.

சாதக அம்சங்கள்

மழை, இரவு என பாரபட்சம் இல்லாமல் எல்லா தருணங்களிலும் கேரள சவாரியில் ஒரேநிலையான கட்டணமே வசூலிக்கப்படும். இதில் சேவைநோக்கம் பிரதானமாகவும், லாப நோக்கம் நியாயமான கட்டணத்தை வசூலிப்பதில் மட்டுமே இருக்கும் என அறிவித்துள்ளது கேரள அரசு. தனியார் வாகனங்களில் 20 முதல் 30 சதவீதம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டுவரும் சூழலில் கேரள சவாரியில் 8 சதவீதம் மட்டுமே சேவைக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி வசூலிக்கப்படும் 8 சதவீத சேவைக்கட்டணத்தில் 6 சதவீதம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் தொழில்நுட்ப குழுவினருக்கும், மீதமுள்ள 2 சதவீதம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும், பயணிகள் மற்றும் ஓட்டுனர்களுக்கு ஊக்குவிப்பு சலுகை வழங்கவும் பயன்படுத்தப்பட உள்ளது. இதேபோல் இந்த செயலிலேயே ஆபத்துகாலத்தில் பயணிகள், ஓட்டுர்கள் பயன்படுத்திக்கொள்ள பிரத்யேக பட்டன்களும் உள்ளன. பயணிகள் அமிழ்த்துவது ஓட்டுனருக்கும், ஓட்டுனர் அமிழ்த்துவது பயணிக்கும் தெரியாது என்பது இதன் இன்னொரு சிறப்பு.

கேரள சவாரி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மானிய விலையில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட உள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களிலும், 5 லட்சம் ஆட்டோக்களும், ஒரு லட்சம் கார்களும் ஓடுகின்றன. இவர்கள் அனைவரையும் ‘கேரள சவாரி’ என்னும் ஒருகுடையின் கீழ் கொண்டுவர கேரள அரசு இம்முயற்சியைத் துவங்கியிருக்கிறது. கேரளத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் மிக அதிகம் என்பதால் இந்த செயலி நல்லவரவேற்பைப் பெறும் என நம்புகிறது அரசு.

இத்திட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்களை இணைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் எரிபொருள் கட்டண சலுகை, டயர் விலையில் மானியம் என பல சிறப்புத்திட்டங்களை வகுத்துள்ளது கேரள அரசு. திருவனந்தபுரத்தில் இத்திட்டத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற நகரங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூகுள் மதிப்பீட்டில் இருக்கும் இச்செயலி, ப்ளே ஸ்டோரில் வரும் நாளுக்காக அரசு மட்டுமல்ல, பயணிகளும் காத்திருக்கிறார்கள்.

x