நகைக்கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் சிக்கிய பெண் காவல் ஆய்வாளர் உட்பட 5 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 5 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, கஞ்சா போதையில் நடந்த ரவுடி கொலையில் வழக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அண்ணாசதுக்கம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஸ்டாலின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அண்ணாசாலை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் பிரபல தங்க நகைக்கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரோஹினி, தற்போது கஸ்தூரிபாய் மருத்துவமனை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 16-ம் தேதி ஜாம்பஜாரில் ஆட்டோ ராஜாவை ரவுடி சூர்யா மற்றும் கூட்டாளிகள் பட்டப்பகலில் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கல்யாணகுமார் வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் வீராசாமி அண்ணாசாலை காவல் ஆய்வாளராகவும், மாம்பலம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.