பல்கலைக்கழக விடுதியில் சட்னியில் நீந்திய எலி: தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்


சுல்தான்பூர்: தெலங்கானாவில் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் உயிருள்ள எலி நீந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், சுல்தான்பூரில் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் தயார் செய்யப்பட்ட கடலை சட்னியில் உயிருள்ள எலி ஒன்று நீந்தியுள்ளது. இதைப் பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த காட்சியை வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தரம் குறைவான உணவை மாணவர்களுக்கு விடுதி நிர்வாகம் வழங்கி வருவதாகக் கூறி இந்த வீடியோவை மாணவர்கள் வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.

இதைப் பார்த்து பலர் கண்டனங்களைப் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு மாணவர்," உணவின் தரத்தைப் பற்றி கேள்வி எழுப்பியவுடன், அவர்கள் எனது முன்பணத்தை திரும்பக் கொடுக்க மறுத்து விட்டனர்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், "இப்படித்தான் நீங்கள் மனித வாழ்க்கையுடன் விளையாடுகிறீர்கள். விடுதிகள் பாதுகாப்பான புகலிடமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு மாணவர்கள் இதுபோன்ற பயங்கரமான சூழ்நிலைகளைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும். உணவுப் பாதுகாப்பு என்பது சமரசத்துக்குட்பட்டது அல்ல, நாம் அனைவரும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் இந்திய விடுதிகள் மீதுகுற்றம் சாட்டியுள்ளார். அதில், " இது மிகவும் திகிலூட்டும் விஷயம். அலட்சியம் மற்றும் உணவை சரியாக மூடாததால் இந்திய விடுதிகளில் அடிக்கடி நிகழ்கிறது. இதனால் உணவு விஷமாக மாறி மரணம் கூட ஏற்படுகிறது. இது உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

x