தந்தை இறப்புக்கு பின் தனிமையில் தவிர்த்த தாய்; 59 வயதில் மறுமணம் செய்து வைத்த மகள்: கேரளத்தில் நெகிழ்ச்சி சம்பவம்


கேரளத்தின் திருச்சூர் மாவட்டம், கோலாழி பகுதியைச் சேர்ந்தவர் ரதிமேனன்(59). இவரது கணவர் மேனன் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிர் இழந்தார். இந்தத் தம்பதிக்கு ப்ரீத்தி, பிரசீதா என இருமகள்கள் உள்ளனர். ப்ரீத்தி திருமணம் முடிந்து இங்கிலாந்தில் வசித்து வருகிறார். தன் தாய் கணவரை இழந்து, தனிமைத் துயரில் தவிப்பதைப் பார்த்த ரதிமேனனின் இளைய மகள் பிரசீதா மறுமணம் செய்துவைக்க முடிவு செய்தார். நீண்ட போராட்டத்திற்குப்பின் தன் தாய் ரதிமேனனை சம்மதிக்கவும் வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ரதிமேனனுக்கும், மண்ணுத்தி பாட்லிக்காடு பகுதியைச் சேர்ந்த திவாகரனுக்கும் திருவம்பாடி கிருஷ்ணன் கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ததோடு, முன்னேநின்று தன் தாயின் மறுமணத்தை தானே நடத்தியும் வைத்தார் ரதி மேனனின் மகள் பிரசீதா.

இதுகுறித்து பிரசீதா நம்மிடம் பேசுகையில், “நான் ஆசிரியையாக வேலை செய்கிறேன். கரோனா காலக்கட்டத்தில் இணையவழியில் பாடங்கள் நடத்தினேன். அதனால் அம்மாவின் அருகிலேயே இருந்ததால் அவர் தனிமையை உணராமல் பார்த்துக்கொண்டேன். கரோனா நடைமுறைகள் முடிவுக்குவந்து நேரடி வகுப்புகள் தொடங்கியதும் என் அம்மா தனிமையில் தவிப்பதை உணர்ந்தேன்.

வீட்டில் தனிமையிலேயே தவித்த அம்மாவுக்கு உணவு ஒவ்வாமை, செரிமானப் பிரச்சினை ஆகியவையும் ஏற்பட்டது. மருத்துவர்களோ அவர் சோகத்திலேயே இருப்பதால் நிகழும் உளவியல்ரீதியான உடல்நலப் பிரச்சினை எனச் சொன்னார்கள். அம்மா, தினமும் தூக்கமாத்திரை சாப்பிட்டே தூங்கும்நிலைக்குப் போனார். அம்மாவின் தனிமையைப் போக்க மறுமணம் செய்துவைக்க முடிவுசெய்தேன்.

என் கணவர் வினீஷ் மோகனும் இதற்கு பரிபூரண ஆதரவு தந்தார். சமூகத்தின் மீதான விமர்சனப் பார்வையில் இருந்து விடுபடவே ஒரு பெண் தனிமையில் இருந்து வாடுவது தேவையில்லை என்பதே என்பார்வை. என் அம்மா முதலில் முதியோர் இல்லத்திற்கு செல்வதில்தான் உறுதியாக இருந்தார். நானும், கணவரும் சமூகப்பார்வையை மிஞ்சிய தனிமனித சுதந்திரத்தையும், வாழ்வின் பிற்பகுதியில் வாழ்க்கைத்துணை தேவை குறித்த அவசியத்தையும் சொல்லி சம்மதிக்க வைத்தோம். இந்தத் திருமணத்தின் மூலம் என் அம்மாவை மீண்டும் இளமையாகப் பார்க்கிறேன். இதேபோல் பிள்ளைகள் முதுமையில் இருக்கும் பெற்றோரை நேசித்தாலே முதியோர் இல்லங்கள் தேவையற்றதாகிவிடும்” என்றார்.

x