`மனுதாரரால் மொத்த சமூகத்துக்கும் தீங்கு ஏற்படும்’- மருந்து கடை உரிமையாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி


‘அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் மீது போதை ஊசி விற்பனை செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அண்ணாதுரை முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், போதை ஊசி விற்பனை செய்ததாக மனுதாரர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் அரிதாக பயன்படுத்தப்படும் சில மருந்துகளை சட்டவிரோதமாக சிலர் போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும் சிலர் ஆன்லைன் மூலமாக மருந்துகளை வாங்கி போதைக்காக பயன்படுத்துகின்றனர்.

இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும். மொத்த சமூகத்துக்கும் தீங்கு ஏற்படும். இதனால் மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதுள்ளது. இதனால் மனுதாருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

பின்னர் நீதிபதி, ‘அரிதாக பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது. போதை பொருள் பயன்படுத்துவது தீவிரமாக குற்றமாகும். இதனால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

x