சென்னையில் பிரபல ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸில் கண்ணாடி துண்டுகள் கிடைப்பதைக் கட்ணடு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், தனியறையில் கோயிலுக்கு 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை செனாய் நகரில் பிரபல அசைவ உணவகமான புஹாரி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் குமரன் என்பவர் தனது நண்பர்களுடன் உணவருந்த வந்தார். சிக்கன் பிரைடு ரைஸ் ஆர்டரை அவர் செய்ததின் பேரில் ஓட்டல் ஊழியர் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
அதில், கண்ணாடித் துண்டுகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமரன் மற்றும் அவரது நண்பர்கள் உடனே ஓட்டல் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் குமரன், தனது நண்பருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு உணவக நிர்வாகமே பொறுப்பு என தெரிவித்துடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட புஹாரி உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் ஓட்டல் நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இந்நிலையில் நண்பர்களுடன் உணவருந்த வந்த குமரன், ஓட்டல் மேலாளரிடம் தனி அறையில் பேசினார்.
அப்போது கண்ணாடி துண்டுகள் இருந்த உணவைச் சாப்பிட்டதால், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் நாங்களே மருத்துவச் செலவைப் பார்த்து கொள்கிறோம். அல்லது அதற்குண்டான மருத்துவ செலவை நீங்கள் தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவரை ஓட்டல் மேலாளர், ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து கோயிலுக்கு நன்கொடையாக 5 ஆயிரம் ரூபாய் கொடுங்க என குமரன் கேட்டுள்ளார். அத்துடன் தனது நண்பரிடம் அதற்கு பில்புக்கை எடுத்து வரச்சொன்னதால் ஓட்டல் மேலாளர் அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.