பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மானாமதுரையில் அரசு புறம்போக்கு இடத்தை தனி நபர்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளனர். இந்த பட்டாக்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்" கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் மனு தள்ளுபடி செய்தது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், மீண்டும் மனு தாக்கல் செய்தது எப்படி? ஒரு பொது நல வழக்கில் ஒரு உத்தரவு தான் பிறப்பிக்க முடியும். மீண்டும் மீண்டும் மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதுடன், பொது நல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளிக்கும் மனுதாரர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கில் மனுதாரருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும். இருப்பினும் அபராதம் விதிக்காமல், பட்டாவை ரத்து செய்யக்கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.