சியாச்சின் பனிப்புயலில் சிக்கி பலியான வீரர்: 38 வருடங்களுக்குப் பின் கண்டெடுக்கப்பட்ட உடல்!


லேன்ஸ் நாயக் சந்திரசேகர்

இந்திய ராணுவ வீரர்கள் ஆற்றும் பணியின் கடினமான பகுதிகளாக இமயத்தின் உச்சி எல்லைகள் அமைந்துள்ளன. இமயமலைப் பகுதியில் பாகிஸ்தான் எல்லையாக சியாச்சின் மற்றும் கார்கிலும், சீனாவின் எல்லையாக அருணாசல பிரதேசமும் அமைந்துள்ளன. இவற்றில் சியாச்சின், உலகின் உயரமான மற்றும் மிகவும் கடினமான போர்க்களம் என அழைக்கப்படுகிறது. அங்கு நிலவும் பனிச்சூழல் எதிரிகளைவிட ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இந்திய ராணுவ வீரர் ஒருவர் 38 வருடங்களுக்கு முன்பு சியாச்சினில் வீசிய பனிப்புயலில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

1984-ல் நடந்த சம்பவம் அது. சியாச்சின் பகுதியில், சுமார் 16,000 அடி உயரத்தில் லேன்ஸ் நாயக் சந்திரசேகர் எனும் ராணுவ வீரர் இரண்டாவது ரேங்கிலான லெப்டினென்ட் புந்திர் தலைமையிலான 18 பேர் கொண்ட ரோந்து படையுடன் இருந்தார். அப்போது பனிப்புயல் வீசத் தொடங்கியதால் அங்குள்ள பதுங்குகுழியில் அனைவரும் பதுங்கினர். எனினும், கடும் பனிப்புயலில் அங்கிருந்த 19 பேரும் காணாமல்போயினர். பின்னர் 14 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஆக.13) இந்திய ராணுவத்தின் படை அங்கு ரோந்து சென்றது. அப்போது, பனியின் மேல்பகுதியில் ஒரு உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. அதன் கழுத்தில் அடையாளமாக இருந்த ஒரு அலுமினிய வில்லையை வைத்து அவர்தான் 38 வருடங்களுக்கு முன் பனிப்புயலில் காணாமல்போன சந்திரசேகர் எனத் தெரியவந்துள்ளது.

யார் இந்த சந்திரசேகர்?

உத்தராகண்ட் மாநிலத்தின் ஹல்துவானியைச் சேர்ந்த சந்திரசேகர், குமாவ் ரெஜிமென்ட் 19-ல் பணியாற்றி வந்தவர். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சந்திரசேகர் காணாமல் போனபோது அவரது மகள்கள் 8 மற்றும் 4 வயதில் இருந்தனர். தற்போது சந்திரசேகரின் உடல் ஹல்துவானிக்கு கொண்டுவரப்பட உள்ளது. 38 வருடங்களுக்குப் பின் நடைபெறும் சந்திரசேகரின் இறுதிச்சடங்கில் அவருடன் பணியாற்றி ஓய்வுபெற்ற பலரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

பலி வாங்கும் பனிமலை

சியாச்சின் பனிமலைப் பகுதியில் கடந்த 1984 முதல் பலியான இந்திய வீரர்கள் எண்ணிக்கை சுமார் 900. அங்குள்ள பனிமலையில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் வாட்டி எடுக்கும். இரவு நேரங்களில் குளிர் இன்னும் அதிகரிக்கும். சியாச்சினின் பனிக்கட்டிகள் மீது நேரடியாகப் படும் நம் உடல் பகுதி கடும் குளிரில் உறைந்து ஒட்டிக்கொண்டுவிடும். இதனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 உபகரணங்கள் உட்பட 50 உபகரணங்கள் அடங்கிய பாதுகாப்பு உடைகளை அணிந்திருத்தல் அவசியம். குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கழற்றும் வகையில் வடிமைக்கப்பட்ட உடைகளை குளியலின்போது அகற்றலாம். கழிப்பறை செல்லும்போதும் இதே நிலைதான்.

சியாச்சினில் உயிர்வாழ முக்கியமான ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவு. எனவே, அங்கு பணியாற்றச் செல்லும் ராணுவ வீரர்களில் 20 முதல் 30 சதவீதத்தினருக்குப் பல்வேறு மருத்துவ உபாதைகள் ஓரிரு நாட்களிலேயே ஏற்பட்டுவிடுகிறது. தலைவலி, ரத்தக் கொதிப்பு, மூச்சுத்திணறல், கடும் இருமல் மற்றும் சளி ஆகியவை ஏற்படும். மூளை, குடல், தொண்டை, கை, கால்கள் போன்ற உடலின் பல பகுதிகளில் ரத்தம் கட்டுதலும் ஏற்படுவதுடன், சிலருக்கு நினைவு இழப்பும் ஏற்படுவது உண்டு. இதனால், சியாச்சினில் பணியாற்றி திரும்பும் வீரர்கள் ராணுவத்தினர் இடையே சாதனையாளர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அதேசமயம், அங்கு பணியாற்ற யாரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை.

’காமதேனு’ இணையதளத்துக்காக, ஓய்வுபெற்ற பிரிகேடியர் வி.ஏ.எம்.உசைனிடம் இது குறித்துப் பேசினோம். அவர் பேசுகையில், “இந்தியா தனது 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை நிறைவுசெய்திருக்கும் வேளையில் நம் நாட்டைப் பாதுகாக்க இந்திய ராணுவத்தினர் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்துகொள்வது முக்கியம். அப்போதுதான் நம் தேசபக்தியும் வளரும். சியாச்சினில் பலியான ஒரு வீரரின் உடலை எங்கள் யூனிட்டின் உயர் ராணுவ அதிகாரி கேப்டன் எஸ்.சி.பாண்டே மீட்கச் சென்றிருந்தார். அப்போது வீசிய பனிப்புயலிலிருந்து தப்பிக்க, அந்த வீரரின் உடலுடன் அவர் பதுங்குகுழியில் 3 நாட்கள் தங்க வேண்டி இருந்தது. சியாச்சின் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லே-லடாக்கில் முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பிறகு அடுத்தடுத்து உள்ள உயரத்தில் உள்ள ஒவ்வொரு முகாமிலும் சில தினங்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒவ்வொரு முகாமிலும் அந்த வீரர்களின் உடல்வாகு அளிக்கும் ஒத்துழைப்பிற்கு ஏற்றவாறு அடுத்த உயரத்தில் உள்ள முகாம்களில் பணியமர்த்தப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இவ்வாறு உச்சத்தில் இருக்கும் முகாமின் பணியாற்ற செல்ல ஒரு வீரருக்குக் குறைந்தது ஐந்து மாதங்கள் ஆகிவிடும். இவ்வளவு உயரத்திலும் அவர்கள் அதிகபட்சம் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் அதற்கு மேல் தொடர்ந்து பணியாற்றினால் உயிர் வாழ்வது கடினம் என்பது காரணம். இந்தக் காலகட்டத்தில் வீரர்களுக்கு ஒருநாள்கூட நிம்மதியான தூக்கம் கிடைக்காது. சியாச்சின் உச்சியில் உள்ள முகாம்களுக்கு நேரடியாக வந்து ஹெலிகாப்டரில் இறங்குபவர்களால் மற்ற வீரர்கள் போல் செயலாற்ற முடியாது. இவ்வாறு இறங்கிய அதிகாரிகள் பலரது பெயர், உயிர் இழந்தவர்கள் பட்டியலில் இடம்பெறுவது சோகமே.

கீழ் மட்டத்தில் உள்ள குறைந்த உயர முகாமுக்குத்தான் கடந்த 2016-ம் ஆண்டு தீபாவளி சமயத்தில் சியாச்சின் வீரர்களுக்கு பிரதமர் நரேந்தர மோடி ஹெலிகாப்டரில் பறந்து நேரில் சென்று இனிப்பு வழங்கினார். அவருக்கு முன்பாக குடியரசு தலைவராக இருந்த அப்துல் கலாமும் அங்கு சென்றுள்ளார். அங்கு வருகை புரிந்த முதல் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.

சியாச்சினின் பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பணியாற்றுகின்றனர். இது இந்தியப்பகுதியை விட பல மடங்கு உயரம் குறைந்த பனிமலை. அங்கு வீசியப் பனிப்புயலால் இதுவரை சுமார் 150 பாகிஸ்தானிய ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

x