பாரதமாதா கோயில் பூட்டை உடைத்த வழக்கில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம்,பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ம் தேதி நடந்த 75-வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பியுமான கே.பி.ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா கோயிலில் பாஜகவினர் மாலை அணிவிக்க முற்பட்டனர்.
அப்போது, கோயிலின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவைத் திறக்க வலியுறுத்தினர். அவர் மறுத்ததால், கோயில் பூட்டை கல்லால் பாஜகவினர் உடைத்தனர். அதன் பின் உள்ளே சென்று பாரதமாதா திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர்.
இதுகுறித்து பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாரதமாதா கோயிலின் வாயில் கதவின் பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக முன்னாள் எம்.பியும், மாநிலத்துணைத்தலைவருமான ராமலிங்கம், தருமபுரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட பாஜக தலைவருமான பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், சிவலிங்கம், ஆறுமுகம், சிவசக்தி உள்பட 5 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். ராசிபுரத்தில் உள்ள இல்லத்தில் இருந்த பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.