அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும்: காவல் ஆணையரிடம் பரபரப்பு புகாரளித்த பாஜகவினர்!


மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி பாஜகவினர் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரரான லெட்சுமணன் உடல் இன்று மாலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "அரசு நிகழ்ச்சி என்பதால் இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்" என்று பாஜகவினரை நோக்கி கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அமைச்சர் பாஜகவினரை வெளியேறுமாறு உத்தரவிட்டதால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற அமைச்சரின் கார் மீது அங்கிருந்த பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும் காலணியை எடுத்து அமைச்சர் காரின் மீது வீசினர். சிலர் கூச்சல் இட்டுக் கொண்டு காரின் முன் பகுதியை கைகளால் தட்டினர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக அவனியாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பாஜகவினர் ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பாஜக சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக பொருளாளர் ஜி. ராஜ்குமார் அளித்துள்ள புகார் மனுவில், மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வரவிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் தலைவர் சரவணன் ஆகியோரை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் மரியாதைக்குறைவாக பேசியுள்ளார். அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘அஞ்சலி செலுத்த இவர்களுக்கு (பாஜக தலைவர்களுக்கு) என்ன தகுதியுள்ளது. இவர்களை யார் விமான நிலையத்துக்குள் விட்டது’ எனக் கேட்டுள்ளார்.

இதனை விமான நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜகவினர் தெரிந்து கொண்டனர். இதனால் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது, அமைச்சரின் கார் ஓட்டுனர் பாஜகவினர் மீது காரை ஏற்றுவது போல் சென்றுள்ளார். அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

அமைச்சரின் தூண்டுதல் பேரில் திமுகவினரும், காவல்துறையினரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜகவினர் பலர் காயமடைந்துள்ளனர். இதனால், அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

x