கிரிக்கெட் மட்டையுடன் அடக்கம் செய்யப்பட்டது லட்சுமணனின் உடல்: 21 குண்டுகள் முழங்க மரியாதை; தாய், பொதுமக்கள் கண்ணீர்


அடக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரான லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரில் உள்ள சொந்த விவசாய நிலத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம்‌ திருமங்கலம் அருகே தும்மக்குண்டை அடுத்த டி. புதுபட்டியைச் சேர்ந்தவர்கள் தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியினர். இவர்களுக்கு பிறந்த லட்சுமணன் - ராமர் என்ற இரட்டைச் சகோதரர்களில் பி.காம் பட்டதாரியான லட்சுமணன் கடந்த 2019-ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்தார். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள பார்கல் ராணுவ முகாமிற்குள் நேற்று முன்தினம் தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய இந்திய ராணுவத்தினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர். தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

லட்சுமணனின் உடலுக்கு அருகே உள்ள அவரது கிரிக்கெட் மட்டை

இதனையடுத்து, அவரது உடல் இன்று விமானம் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் உடல் அவரது சொந்த ஊரான டி. புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஊர் மக்கள் என பலரும் லட்சுமணனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அவரது தாய் லட்சுமணனின் சிறு வயது புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், ஓ. பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உள்ளிட்ட பலரும் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, புதுப்பட்டியில் உள்ள லட்சுமணனின் சொந்த விவசாய நிலத்தில் அவரது உடல் அடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் சுமார் 3.30 மணி அளவில் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் லட்சுமணனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், அவர் சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நபர் என்பதாலும் அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதாலும் அவரது கிரிக்கெட் மட்டையையும் அவரோடு சேர்த்து வைத்து அடக்கம் செய்தனர்.

x