பெரியகுடி ஓஎன்ஜிசி கிணறு விவகாரம்: மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை ஏற்ற விவசாயிகள்


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டம்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓஎன்ஜிசி புதிய கிணறுகள் அமைக்கவோ, செயல்படுத்தவோ அனுமதி கிடையாது, முழுமையாக அடைத்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை ஏற்று விவசாயிகள் அறிவித்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம், பெரியகுடியில் 2013 முதல் மூடப்பட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணற்றை திடீரென உரிய அனுமதி இல்லாமல் வணிக நோக்கோடு பயன்படுத்துவதற்கு அண்மையில் ஓஎன்ஜிசி நடவடிக்கை மேற்கொண்டது. இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சுதந்திர தினத்தன்று மன்னார்குடியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கலந்து கொண்ட சமாதான கூட்டம் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் சார்பில் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட விவசாயிகள், ஓஎன்ஜிசி அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மன்னார்குடி கோட்டாட்சியர் கீர்த்தனாமணி, வட்டாட்சியர் ஜீவானந்தம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

விவசாயிகள் சார்பில் உடனடியாக பெரியக்குடி கிணற்றை மூடுவதோடு குழாய்கள் அகற்றப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 2015க்கு பிறகு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கிணறுகளை முழுமையும் தடை செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் பாறை எரிவாயு மீத்தேன் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். சட்டத்தை மீறி ஓஎன்ஜிசி செயல்படுவதை அனுமதிக்க கூடாது. ஏற்கெனவே தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள இஸ்மாயில் குழு அறிக்கையை ஏற்க கூடாது. மீண்டும் விவசாயிகள் கருத்தை கேட்டு மறு கள ஆய்வு செய்து அதன் அடிப்படையில் அறிக்கையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேலாண்மை குழுவில் விவசாயிகள் தொழில்நுட்ப ஆய்வாளர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு இணைத்து, தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட அனுமதிக்க வேண்டும், தஞ்சாவூர் சாலியமங்கலம் அரவிந்த் செராமிக்ஸ் ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஓஎன்ஜிசி தரப்பில் உயர் அதிகாரிகள் அனுமதி பெறாமல் முழுமையாக மூட முடியாது என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பேரழிவு ஏற்படுத்தும் கிணறுகளுக்கு அனுமதி கிடையாது என்பது அரசின் கொள்கை முடிவு. எனவே உடனடியாக பெரியகுடி கிணற்றை முழுமையாக மூடிவிட்டு வெளியேற வேண்டும். அதற்கான முழு பொறுப்பையும் ஓ என்ஜிசி ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய கிணறுகள் எதையும் அமைப்பதற்கு அனுமதி கிடையாது.

தமிழக அரசு அனுமதி இல்லாமல் எந்த ஒரு புதிய கிணறுகள் செயல்படுவதற்கு அனுமதிக்க மாட்டோம். ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள கிணறுகள் தவிர்த்து மற்ற கிணறுகளில் எந்த ஒரு பணி மேற்கொள்வதாக இருந்தாலும் தமிழக அரசின் அனுமதி பெற வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற வழிகாட்டு நெறிமுறைக்கு புறம்பாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உறுதிபட உத்தரவிட்டார். விவசாயிகள் சார்பில் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் முதலமைச்சர் மூலம் மேற்கொள்ளப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். அதனையேற்று விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை விவசாயிகள் ஒப்புக்கொண்டு போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனர்.

x