என் தம்பி உயிரிழந்த நிலையில், அரசு அழைத்தால் நானும் நாட்டிற்காக ராணுவத்தில் சேருவேன் என உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணனின் சகோதரர் ராமர் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள பார்கல் ராணுவ முகாமில் நேற்று தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மதுரை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழக வீரரான லட்சுமணன் உள்ளிட்ட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதில், லட்சுமணனின் உடல் நாளை மதுரை வர உள்ளது.
புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியினருக்கு பிறந்த இரட்டை சகோதரர்களில் ஒருவர் லட்சுமணன் மற்றும் அவரது அண்ணன் ராமர் பி.பி.ஏ முடித்துவிட்டு விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ராமர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "லட்சுமணன், கடந்த 25 நாட்களுக்கு முன்பு தான் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துவிட்டு சென்றார். நாட்டிற்காக உயிரிழந்தது பெருமையாக உள்ளது. என் தம்பி உயிரிழந்த நிலையில், அரசு அழைத்தால் நானும் நாட்டிற்காக ராணுவத்தில் சேருவேன்" என்றார்.
வீரமரணம் அடைந்த லட்சுமணனின் தந்தை தர்மராஜ் கம்பீரம் கூறுகையில், "நீங்க (குடும்பம்) ஊர்ல இருக்க வேண்டாம், என்னோட வந்துருங்க" என்று லட்சுமணன் கூறிக் கொண்டிருந்தான். அவனோட ஆசையெல்லாம் அவனோட அண்ணனை நல்ல நிலைக்கு கொண்டு வரணும் என்பது தான். அண்ணனுக்கு ஒரு நல்ல வேலையை வாங்கி கொடுக்கணும். இல்லைனா ஏதாவது தொழில் துவங்கி கொடுக்க வேண்டும். இரண்டு வருடத்திற்குள் அண்ணனை நல்ல நிலைமைக்கு கொண்டு வத்துட்டு அதுக்கப்புறம் தான் எனக்கு கல்யாணம் முடிந்தால் போதும்" என்று லட்சுமணன் தன்னிடம் கூறியதாக அழுதபடியே கூறினார்.