`தோட்டத்துக்கு போகாதீங்க; ஆவேசத்துடன் யானைகள் சுற்றித்திரிகிறது'- மக்களை அலர்ட் செய்த வனத்துறையினர்!


தோட்டத்திற்குள் சுற்றித்திரியும் காட்டு யானை

பழநி அருகே தோட்டங்களுக்குள் குட்டி யானையுடன் சுற்றித் திரியும் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியை அடுத்துள்ளது ஆயக்குடி பேரூராட்சி. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மா, கொய்யா, சப்போட்டா, தென்னை உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இச்சூழலில், வனப்பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகள் மற்றும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

இந்நிலையில், ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் உள்ள விவசாயத் தோட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இவை இரண்டு குழுவாக பிரிந்து சுற்றி வருகின்றன. இந்நிலையில், ஆயக்குடி புது ரோடு பகுதியில் உள்ள தோட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு யானைக்கூட்டம் புகுந்து பயிர்களை நாசம் செய்துவருவதாக ஒட்டன்சத்திரம் வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

யானைகளை விரட்ட வந்துள்ள வனத்துறையினர்

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டபோது, ஒரு குட்டி யானையுடன் நான்கு பெரிய யானைகள்‌ சுற்றி வருவது தெரியவந்தது. தொடர்ந்து, யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். யானைகள் குட்டியுடன் சுற்றி வருவதால் கடும் கோபத்தில் இருப்பதாகவும், எனவே யானைக் கூட்டத்தை விரட்டும் வரை அப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

x