போலீஸ் வாகனத்தில் அத்துமீறி டிக்டாக்: கெத்துக் காட்டிய இளைஞர்கள் சிக்கினர்


போலீஸ் வாகனத்தில் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்து டிக் டாக் வீடியோ பதிவிட்ட சட்ட கல்லூரி மாணவன் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

இரு வாலிபர்கள் காவல் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து துப்பாக்கி , கத்தியுடன் ஒருவரை கொடூரமாகத் தாக்குவது, கொலை செய்வது போன்ற டிக்டாக் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இவ்வாறு கொடூரமான வீடியோவை பதிவிட்டு சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வீடியோ பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சிலர் காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் படமாக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் புது வண்ணாரப்பேட்டை போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வீடியோவில் உள்ள நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் மணலி புதுநகரைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் சஞ்சய்(22), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவன் வினோத்(22) என தெரியவந்தது.

இதனையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் வன்முறையான வீடியோ காட்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால் லைக்கிற்கு ஆசைபட்டு காவல் வாகனத்தில் சட்டவிரோதமாக ஏறி வீடியோ சூட் நடத்தியதாக தெரிவித்தனர். மேலும் பொம்மை துப்பாக்கி, கத்தியைப் பயன்படுத்தி இது உண்மை என பொதுமக்களை நம்ப வைத்து ஏமாற்றியதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சஞ்சய், வினோத் ஆகியோர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், போலீஸ் வாகனத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.

x