வாரிசு முறையில் பணி நியமனம் பெற்றுத் தருவதற்கு 15 ஆயிரம் லஞ்சம் கேட்கும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடியைச் சேர்ந்த சீனியம்மாளின் தாயார் வேலம்மாள் வளையபட்டி பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த போது திடீரென உயிரிழந்தார். இந்நிலையில், சீனியம்மாள், வாரிசு அடிப்படையில் தாயின் பணியினை தனக்கு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணை மனு அளித்திருந்தார். நிர்வாக காரணங்களால் பணி நியமனம் தாமதமானது.
இச்சூழலில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் சத்துணவுக்கான நேர்முக உதவியாளராக கடந்த மாதம் 8-ம் தேதி பணிக்குச் சேர்ந்துள்ளார் செல்வராஜ். இவர், நிலுவையில் இருந்த சீனியம்மாளின் கருணை மனுவினை பரிசீலனை செய்து அதற்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு, சீனியம்மாளின் மகனிடம் 15 ஆயிரம் லஞ்சம் கேட்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
ஆடியோவில், செல்வராஜ், "தம்பி நாளைக்கு ஒரு 15 ஆயிரம் ரூபாய் எப்படியாவது புரட்டி கொண்டு வந்துவிடுங்க" என்று கூற, "சரிங்க சார்…" என்கிறார் சீனியம்மாளின் மகன். தொடர்ந்து, செல்வராஜ், "நீங்க கஷ்டபடுவிங்கன்னு நினைச்சு தான் நானே ஃபைல எடுத்து உங்களை கூப்பிடுகிறேன்" என்கிறார். மேலும், அதற்கு, "சார் நாங்கல்லாம் அன்றாடம் காட்சி, இவ்வளவு ஆகும் என்று நான் நினைக்கவில்லை" என்று பதிலளித்த சீனியம்மாள் மகனிடம், செல்வராஜ், "தம்பி இது பெர்மனன்ட் போஸ்ட். நீங்க ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. பார்த்துக்கோங்க" என்று முடிக்கிறார்.
இந்நிலையில், "இது தொடர்பாக தங்களுக்கு இதுவரை புகார்கள் ஏதும் வரவில்லை என்றும் புகார்கள் வரப்பெற்றால் இதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.