சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்ற கார்; தடுத்த ஊழியருக்கு நடந்த கொடூரம்: வைரலாகும் காட்சி


கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் சுங்கச் சாவடியில் வந்த கார் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றது. அதைத் தடுத்து நிறுத்திய சுங்கச் சாவடி ஊழியரை காரிலேயே சிறிது தூரம் இழுத்துச் சென்ற கொடூரக் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

கேரள மாநிலம், கொல்லத்தில் கூரிப்புழா பகுதியில் சுங்கச் சாவடி ஒன்று உள்ளது. இங்கு சுங்கக்கட்டணம் செலுத்திவிட்டுத்தான் வாகனங்கள் கடக்க முடியும். ஆனால் இந்த சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் செல்வதற்குக் கட்டணமில்லாத சிறப்பு வழி ஒன்று உண்டு. அதன் வழியே கார் ஒன்று செல்ல முயன்றது. இதைச் சுங்கச் சாவடியின் ஒப்பந்த ஊழியர் அருண்(23) என்பவர் தடுத்து நிறுத்தினார். ஆனால் அவரை காரில் இருந்தவர் தாக்கினார்.

திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த அருண், காரின் சாவியை எடுக்க முயன்றார். அப்போது காரை ஓட்டியவர் அருணின் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது காரை ஓட்டியவரின் பக்கத்து இருக்கையில் இருந்தவர், நாம் இவனை இழுத்துக் கொண்டுசெல்வோம் எனக் கூறியிருக்கிறார். உடனே காரை ஓட்டிவந்தவர் அருணின் கழுத்தைப் பிடித்துக்கொண்டே காரை முப்பதுமீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்று, அருணைக் கீழே தள்ளினார். இதில் அருணின் கால், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனர். அருண் இப்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நேற்று மதியம் 2.40க்கும் நடந்த இந்த நிகழ்வு இணையத்திலும் வைரல் ஆனது. கேரள பதிவெண் கொண்ட அந்தக் கார் ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டியது கொல்லம் மாவட்டம், வர்கலாவைச் சேர்ந்த லஞ்சித் என்பது தெரியவந்தது. அவர் தலைமறைவாகிவிட்டார். அவரோடு காரில் இருந்த அவரது வழக்கறிஞர் நண்பரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x