வேறு ஒருவருக்கு மகனின் சொத்துகளை எழுதி வைக்க முயன்ற மருமகளை கொலை செய்த மாமியார், தலையை துண்டித்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், ராயல்சூட்டி அருகே உள்ள கி.ராமபுரத்தை சேர்ந்தவர் வசுந்திரா (35). இவரது கணவர் இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. கணவர் இறப்புதற்கு முன்பு தனது மனைவி வசுந்திரா பெயரில் உயில் எழுதிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், வசுந்திராவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது மாமியாருக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில், தனது கணவர் எழுதிக் கொடுத்த சொத்தை தன்னுடன் பழகி வரும் ஆண் நண்பருக்கு எழுதி கொடுக்க முடிவு செய்துள்ளார் வசுந்திரா. இந்த தகவல் மாமியார் சுப்பம்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பம்மா, மருமகளை கொல்ல திட்டம் தீட்டினார். அதன்படி, மருமகளை விருந்துக்கு அழைத்துள்ளார் மாமியார். இதை நம்பிச் சென்ற வசுந்திராவை, தனது இளைய மருமகனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார் சுப்பம்மா.
பின்னர் வசுந்திராவின் தலையை கத்தியால் துண்டித்த சுப்பம்மா, தலையை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொண்டு ராயல்சூட்டி காவல்நிலையத்துக்கு சென்றார். இதனைப் பார்த்து அங்கிருந்த காவலர்கள் பதறினர். இதையடுத்து, தலையை கைப்பற்றிய காவல்துறையினர், சுப்பம்மா வீட்டிற்கு சென்று உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சுப்பம்மா, அவரது இளைய மருமகனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
மகனின் சொத்தை இன்னொருவருக்கு எழுதி வைக்க முயன்ற மருமகளின் தலையை துண்டித்துக் மாமியார் கொலை செய்த சம்பவம் ஆந்திராவை அதிர வைத்துள்ளது.